Published : 09 Jan 2024 03:00 PM
Last Updated : 09 Jan 2024 03:00 PM

‘மதச்சார்பு சிறுபான்மையினர்’ அந்தஸ்து சான்றிதழ் இனி நிரந்தரமானதாக வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி நிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.9) தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நமது திராவிட மாடல் அரசு, தமிழகத்தில் வாழும் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களது சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதிலும் எப்போதும் கவனமாக உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். சிறுபான்மையின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்பை வழங்கியும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிசெய்தும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தியும், சிறுபான்மையினருக்கு ஒரு வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதில் எங்களது அரசு பெரும் பங்காற்றி வருகிறது என்றால், அது மிகையல்ல.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம், சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு, ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள் என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் கிறிஸ்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனித்தீர்மானம் கொண்டு வந்து நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இப்படி எண்ணற்ற திட்டங்களை மறைந்த முதல்வர் கருணாநிதியின் காலம் தொட்டு, நாங்கள் சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில்கொண்டு திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செம்மையாக, உறுதியோடு செயல்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில், இங்கே நீங்கள் தெரிவித்திருக்கிற கருத்துகளின் அடிப்படையிலும், கோரிக்கைகளின் அடிப்படையிலும் அரசு சார்பில் நாங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கான இணையதளம் (Web Portal) இந்த மாதத்துக்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் (Revised Guidelines) இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

கிறிஸ்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளைத் தளர்த்தி சவப்பெட்டியில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்; மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்; உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பதைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்; சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள கிறிஸ்துவக் கல்லைறையில் இருப்பதைப் போன்று உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் ஆணையையும் இந்த வார இறுதிக்குள்ளாக வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புதிய விதி, தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள கிறிஸ்தவக் கல்லைறைகளுக்குப் பொருந்தும். கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி, நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் , கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில், மசூதி, தேவாலயம், குர்த்வாரா போன்றவற்றின் மூலம் பொது நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முறைப்படுத்துதல், மறு இருப்பிடம் செய்தல் தொடர்பாக விரிவான கொள்கை அரசால் உருவாக்கப்பட்டு, ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டுத் தலங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதிலும் பல இடர்ப்பாடுகளைக் களைந்து, ஒரு நிலையான இயக்க நடைமுறை (SOP) வெளியிடப்படும். இதற்காக உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசு சாரா நிறுவனங்களுக்கான மானியத் தொகையை எந்தவித தங்குதடையுமின்றி, விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக, உரிய இணைய வழி முகப்பு உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இல்லங்கள் மற்றும் விடுதிகளுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் குறித்து தேவையான அனைத்துச் சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் குறுகிய காலத்துக்குள் உரிமம் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் வழங்கப்படும் அரிசி போன்றவை இல்லங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கப்பெறுவது தொடர்பாக மாநில அளவில் உள்ள துறைகளின் மூலம் இதற்கான விநியோக அனுமதி மற்றும் குறைத்தீர்வு வழிமுறைகள் (Grievance redressal mechanism) வழங்கப்படாமல் மாவட்ட ஆட்சியரின் மூலமே இதற்கான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs), வானவில் மன்றம், தேன் சிட்டு மலர், கலைத்திருவிழா போன்ற திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்துவது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.

அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி நிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும்.

கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யுஜிசி மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் மூன்று மாத காலத்துக்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

சமூக நலத் துறை, ஆதி திராவிடர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் கீழ் உதவி பெறும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், உரிமங்களைப் புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள்ஆகியவை எளிமைப்படுத்தப்படும். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நான் குறிப்பிட்ட விவரங்களில் இடம்பெறாத உங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் மீதும் அரசு உரிய கவனம் செலுத்தி அவற்றுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்க திறந்த மனத்தோடு இருக்கிறேன். உங்களது பிரதிநிதியாகவே திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இருக்கிறார். மேலும், தொடர்புடைய அரசு செயலாளர்களிடம் உங்கள் கோரிக்கைகளை வழங்கலாம். உரிய நேரத்தில் அவற்றை பரிசீலித்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். திராவிட மாடல் அரசின் இந்தப் பணித் தொய்வின்றித் தொடரும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x