Last Updated : 04 Jan, 2024 08:16 PM

 

Published : 04 Jan 2024 08:16 PM
Last Updated : 04 Jan 2024 08:16 PM

வாரி சுருட்டிச் சென்ற வெள்ளம்: பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி @ தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை புரட்டி போட்ட மழை வெள்ளம், கலைநயம் மிக்க பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரையும் விட்டு வைக்கவில்லை. ஏரல் அருகே வாழவல்லானில் பல வண்ணங்களில் பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மழை வெள்ளம். அதில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் இந்த மகளிர் குழுவினர்.

மகளிர் குழுவினர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானில் ‘பொதிகை மகளிர் குழு’ செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் ‘மதிப்புக்கூட்டிய மண்பானை கலைபொருட்கள்’ தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இக்குழுவில் மொத்தம் 18 பெண்கள் உள்ளனர். இதில் பிஎஸ்சி பிஎட் பட்டம் படித்த சுப்புலெட்சுமி என்ற பெண்தான் மண் பானையில் கலைநயம் மிக்க ஒவியங்கள் மற்றும் வண்ணங்களை தீட்டுவது குறித்து மகளிர் குழுவினருக்கு பயிற்சி அளிப்பதுடன், தானும் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக பல வண்ணங்களில் பொங்கல் பானைகளை தயாரித்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கும் சிலர் வாங்கி சென்றுள்ளனர். ஆண்டு தோறும் கலைநயம் மிக்க ஓவியங்கள் மற்றும் வண்ணங்கள் தீட்டப்பட்ட 10 ஆயிரம் பொங்கல் பானைகளை தயாரித்து வந்துள்ளனர்.

வாரி சுருட்டிய வெள்ளம்: இந்த ஆண்டும் வழக்கம் போல வங்கி கடன் மற்றும் குழு உறுப்பினர்களின் சொந்த பணத்தில் ரூ.8 லட்சம் வரை முதலீடு செய்து பொங்கல் பானை தயாரிப்பு பணிகளை உற்சாகமாக தொடங்கினர். பானை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த அதீத கனமழை அனைத்தையும் வாரி சுருட்டி சென்றுவிட்டது.

தயாரித்து சுடுவதற்காக தயாராக வைத்திருந்த சுமார் 10 ஆயிரம் மண் பானைகள், 9.500 அடுப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. ஏரல் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பெரும் வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த மகளிர் குழுவினர், அந்த இழப்பில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். மிச்சம் மீதமிருந்த பொருட்களை கொண்டு கடந்த சில நாட்களாக பொங்கல் பானை தயாரிப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெறும் 500 பானைகள் மட்டுமே அவர்களால் தயாரிக்க முடிந்துள்ளது.

வாழ்வாதரம் கேள்விக்குறி: இது குறித்து பொதிகை மகளிர் குழுவின் தலைவி டி.சிவசக்தி 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: மண் பானைகளில் கலைநயம் மிக்க ஓவியங்கள் மற்றும் வண்ணங்களை தீட்டி பொங்கல் பானை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மக்கள் மத்தியில் இந்த பானைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக எங்களது தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது.இந்த ஆண்டு மழை வெள்ளம் எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது. தயாரித்து சுடுவதற்காக வைத்திருந்த மண்பானைகள் மற்றும் அடுப்புகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. எங்களுக்கு ரூ.8 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் தொழிலை தொடங்கியிருக்கிறோம். எங்களிடம் பொங்கல் பானை கேட்டு வந்த பல ஆர்டர்களை ரத்து செய்துவிட்டோம். தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும் தயாரித்து கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். இதுவரை 500 பானைகள் மட்டுமே தயாரித்துள்ளோம். பொங்கலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதிகபட்சமாக 2000 பானைகள் வரை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

அரை கிலோ முதல் 5 கிலோ வரை அரிசி கொள்ளளவு கொண்ட பானைகளை தயாரிக்கிறோம். இந்த பானைகளை ரூ.200 முதல் ரூ.600 விலைக்கு விற்பனை செய்கிறோம். மழை வெள்ளத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் விலையை உயர்த்தவில்லை. வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்த விலையை தான் வாங்குகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உதவி செய்ய வேண்டும். மகளிர் குழு மூலமாக மாவட்ட தொழில் மையத்தில் மனு கொடுத்துள்ளோம். மானியத்துடன் கடன் தருவதாக உறுதியளித்துள்ளனர். கடனுதவி கிடைத்தால் மட்டுமே நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x