

தமிழகத்துக்கான நிதி: நிர்மலா சீதாராமன் விளக்கம்: “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. நான்கு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. 2014 முதல் 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி 6 புள்ளி 23 லட்சம் கோடி ரூபாய். அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி 6 புள்ளி 96 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி கொடுத்து வருகிறோம்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் தேதிகளை அறிவித்த ஆட்சியர் சங்கீதா, பாரம்பரியமாக கடந்த காலத்தில் நடைபெற்ற இடங்களிலே இந்த ஆண்டும் போட்டிகள் நடைறும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ம் தேதி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டை முனி வாசல் மந்தை திடலில் 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறவுள்ளது.
காங்கிரஸில் இணைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா வியாழக்கிழமை தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
‘கிளாம்பாக்கத்தில் ரயில் நிலைய பணிகளை துரிதப்படுத்த நிதி’: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமையவிருக்கும் ரயில் நிலையத்தின் பணிகளை வேகப்படுத்துவதற்கு சிஎம்டிஏ சார்பில் ரயில்வே-க்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய பணியை வேகப்படுத்த ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜன.8 வரை மிதமான, கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் இம்மாதம் 8-ம் தேதி வரை பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.
கேஜ்ரிவால் மீது விரைவில் கைது நடவடிக்கையா?: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மூன்று முறை சம்மன் அனுப்பிய நிலையிலும் விசாரணைக்கு ஆஜராகாத ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு ஆஜராகாததால் அரவிந்த் கேஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரகள் அச்சம் தெரிவித்தனர்.
இதனிடையே, “மத்திய அரசு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து, அவர்களை அவமானப்படுத்துகிறது” என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடக்கவிருப்பதை அடுத்து, இதில் பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்துள்ளார்.
தொடரை சமன் செய்தது இந்தியா!: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
“பாஜகவுக்கு தக்க பதிலடி தரவேண்டும்” - கார்கே: 10 ஆண்டு கால தோல்விகளை மறைப்பதற்காக பாஜக உணர்வுபூர்வமான விஷயங்களை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு: 103 பேர் பலி: ஈரானில் புதன்கிழமை நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.