

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் தேதிகளை அறிவித்த ஆட்சியர் சங்கீதா, பாரம்பரியமாக கடந்த காலத்தில் நடைபெற்ற இடங்களிலே இந்த ஆண்டும் போட்டிகள் நடைறும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் சங்கீதா கூறியது: "உலகப் புகழ்ப் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ம் தேதி ( திங்கள்கிழமை ) தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
பாலமேடு பேரூராட்சியில் மஞசமலை ஆறு திடலில் 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) பாலமேடு ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டை முனி வாசல் மந்தை திடலில் 17-ம் தேதி ( புதன்கிழமை ) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த ஆண்டும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.