பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: கேலோ இந்தியா விழாவில் பங்கேற்க அழைப்பு

பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: கேலோ இந்தியா விழாவில் பங்கேற்க அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடக்கவிருப்பதை அடுத்து, இதில் பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி இன்று நேரில் சந்தித்துள்ளார்.

கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் ஜன.19 முதல் 31-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டியின் நிறைவு விழாவை சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த தமிழக விளையாட்டுத் துறை திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், இந்த நிறைவு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நேரில் அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சர்களையும் சந்திக்கிறார்: பிரதமரைச் சந்தித்து அழைப்பிதழை வழங்கிய நிலையில் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரையும் சந்தித்து உதயநிதி அழைப்பு விடுக்க இருக்கிறார். அதன்பின், மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி தொடர்பாக பேசுவார் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி, "கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக டெல்லி செல்கிறேன். பிரதமரைச் சந்திக்கும்போது தமிழக மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை கூடுதலாக வழங்கும்படி வலியுறுத்துவேன்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in