Last Updated : 04 Jan, 2024 05:39 PM

15  

Published : 04 Jan 2024 05:39 PM
Last Updated : 04 Jan 2024 05:39 PM

“மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்” - அண்ணாமலை

சேலம்: “மோடி பிரதமராக வருவதற்கு ஆதரவளிப்பதில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கு 39 தொகுதிகளிலும் வெற்றியைத் தர வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியை கூட திருடாதவர்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஓமலூரில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பொதுமக்களிடையே பேசியது: “வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களிடம் நிதி திரட்டி, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில், நாட்டிலேயே அதிக நிதி கொடுத்த 3-வது மாநிலம் தமிழகம். இங்குதான் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார்கள். அந்த சனாதனத்தை மீட்டெடுக்கவே இந்த யாத்திரை. சாதியை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். அந்த சாதியை வைத்து, திமுக அரசியல் செய்கிறது. இதை உடைக்க வேண்டும்.

திமுகவில் 35 அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களில் 11 பேர் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்கு உள்ளது. ஏற்கெனவே, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். தமிழகத்தில் முந்தைய, தற்போதைய எம்பி., எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் 120 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியை கூட திருடாதவர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 2014-ல் 283 எம்பி-க்களும், 2019-ல் 303 எம்பி-க்களும் கிடைத்தனர். வரப்போகும் தேர்தலில் 400 முதல் 450 எம்பி-க்கள் கிடைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி பிரதமராக ஆவதற்கு அனைத்து மாநிலங்களிலும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மோடி பிரதமராக வருவதற்கு, ஆதரவளிப்பதில் தமிழகம் தான் கடைசியில் இருந்தது.

வரப்போகும் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். கடன் வாங்குவதில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் ரூ.3.81 லட்சம் கடன் உள்ளது.

திமுக கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில், 20 மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவர். மோடி என்றால் கேரண்டி என்று அர்த்தம்” என்றார். நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் துரைசாமி, ராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x