Published : 03 Jan 2024 04:55 PM
Last Updated : 03 Jan 2024 04:55 PM

“தமிழகத்தில் எனக்குத் தெரிந்த ஒரே நிதி... கருணாநிதி மட்டுமே” - நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கு நிதி வழங்குவது குறித்த கேள்விக்கு, “எனக்குத் தெரிந்த ஒரே நிதி கருணாநிதி மட்டும்தான். வேறு நிதியை எனக்கு தெரியாது” என நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கேலியாக பதிலளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். அவரது அண்ணன் கோபாலன் மனைவியுடன் வந்திருந்தார். ஆண்டாள் ரெங்க மன்னார் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம், வடபத்ர சயனர் சந்நிதி ஆகியவற்றில் இல.கணேசன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்தேன். அப்படியே மார்கழி மாதத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். இங்கு கோயிலுக்கு வந்த டெல்லியை சேர்ந்தவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் இது தென்னகத்து மீராவின் ஆலயம் என பெருமையுடன் குறிப்பிட்டேன். பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் முழு உருவம் ஆண்டாள்.

தமிழக வெள்ள பாதிப்புக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நாகாலாந்து மக்கள் குறித்து சிலருக்கு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு நான் அன்றே அறிக்கை வெளியிட்டுவிட்டேன். நீங்கள் நாகலாந்து வாருங்கள், ராஜ் பவனில் தங்கி இருந்து எங்கள் மக்களை பாருங்கள். நாகலாந்து மக்கள் மிகவும் பண்பானவர்கள். தங்கள் பாரம்பரியம் மீது பெருமை மிக்கவர்கள். ஆர்.எஸ்.பாரதி கூறியது மறந்து போன விஷயம். அதை மீண்டும் கிளற வேண்டாம்” என்றார்.

அப்போது தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கு நிதி வழங்குவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு 'எனக்கு தெரிந்த ஒரே நிதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தான். வேறு நிதி தெரியாது” என கேலியாக தெரிவித்தார். அப்போது விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x