Published : 02 Jan 2024 04:33 PM
Last Updated : 02 Jan 2024 04:33 PM

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100% எண்ண வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண வேண்டும் என்று கோரிய வழக்கின் விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாக்கியராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்குகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் இணைக்கப்பட்டன. ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடிகளில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, ஒப்புகைச் சீட்டுக்கள் எண்ணப்பட்டன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும்.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், 541 தொகுதிகளில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட, அதிக வாக்குகள் எண்ணப்பட்டன. அதேபோல 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட முடிவுகளில் குறைந்த வாக்குகள் எண்ணப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள இந்த குறைபாடுகள் காரணமாக, எதிர்வரும் மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டுக்கள் எண்ணப்படும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது. எனவே, தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இதே கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x