Published : 01 Jan 2024 04:13 PM
Last Updated : 01 Jan 2024 04:13 PM

“சேலம் விவசாயிகள் 2 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன்... பின்னணியில் பாஜக” - மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

சென்னை: "பாஜகவால் அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு சேலம் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதிலும் சாதியைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே, பட்டியல் சாதியை சார்ந்த விவசாயிகளின் நிலத்தை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ள குணசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் கிராமம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முதியவர்களும், ஏழை விவசாயிகளுமான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் ஆறரை ஏக்கர் நிலத்தை தனது பெயரில் மாற்றி போலி பத்திரம் செய்த பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கொலை, நில அபகரிப்பு போன்ற கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியுமான குணசேகரன் என்பவரை உடனடியாக கைது செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சேலம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரன் என்பவர் வயதான ஏழை விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முற்பட்ட போது அவர்கள் விற்பதற்கு முன்வராததால் காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளின் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தனது பெயருக்கு போலி பத்திரம் செய்துள்ளார். விவசாயிகளையும் தங்களின் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத வகையில் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியும் உள்ளார்.

இது குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டும் தனது பாஜக அரசியல் பின்னணியையும், கிரிமினல் குற்ற பின்னணியையும் பயன்படுத்திக் கொண்டு நடவடிக்கை எடுக்காத வகையில் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த இருவரது நிலத்தை அபகரித்தது போல் இப்பகுதியில் ஏராளமான விவசாயிகளின் நிலங்களையும் அபகரித்துள்ளது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிபறிப்பு, போதைப் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு என பல்வேறு குற்ற பின்னணிகளை கொண்டவர்கள் பாஜக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட தனது சொந்த கட்சிக்காரான நடிகர் கவுதமியின் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாஜகவினரே அபகரித்தது நாடறியும். இதுபோன்று தமிழகம் முழுவதும் மத்திய ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி பாஜகவினர் சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்துள்ள சேலம் பாஜக மாவட்ட பொறுப்பாளர் குணசேகரனை நில அபகரிப்பு சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உடன் கைது செய்திடவும், இவருக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகளை கைது செய்து உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு இவரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு திரும்ப வழங்கிடவும், கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.

பாஜகவால் அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதிலும் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

எனவே, பட்டியல் சாதியை சார்ந்த விவசாயிகளின் நிலத்தை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ள குணசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x