Published : 30 Dec 2023 05:29 AM
Last Updated : 30 Dec 2023 05:29 AM

சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்: ஆளுநர், அமைச்சர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி

சென்னை தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னை தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர், மத்திய, மாநில அமைச்சர்கள், தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் என லட்சக்கணக்கானோர் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்(71). உடல்நலக் குறைவால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமம் வீடு மற்றும் கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் சென்னை தீவுத்திடலில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், காவல்துறையுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு, விஜயகாந்த் உடல் கோயம்பேடு கட்சி தலைமைஅலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்களும், பொதுமக்களும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே தீவுத்திடலில் குவியத் தொடங்கினர். நேற்று காலை 6.15 மணி முதல்அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், திரையுலகினர், பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி,ஆம் ஆத்மி மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிராஜன், விஜய் வசந்த், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் எம்எல்ஏ வாகை சந்திரசேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உடலுக்குமலர்வளையம் வைத்து அஞ்சலியை செலுத்தி, பிரேமலதாவுக்கும், அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறினார்.

இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பார்த்திபன், பாக்யராஜ், ராம்கி, பரத், லிவிங்ஸ்டன், காந்த், சுந்தர்.சி, சாந்தனு பாக்யராஜ், நந்தா, தாமு, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, ஜெயபிரகாஷ், கிளி ராமச்சந்திரன், கிங்காங், நடிகைகள் நிரோஷா, அறந்தாங்கி நிஷா, நளினி, தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், டி.சிவா, இசையமைப்பாளர்கள் தேவா, காந்த் தேவா, ட்ரம்ஸ் மணி, பாடகர்கள் மனோ, வேல்முருகன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு அஞ்சலி செலுத்திவிட்டு, பிரேமலதாவை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல்,முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிரேமலதாவை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். மு.க.தமிழரசு, அருள்நிதி மற்றும் ‘தாய் உள்ளம்’ அறக்கட்டளையின் சார்பில் 25 மாற்றுத் திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனத்தில்அணிவகுத்து வந்து விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினார். பின்னர் பிரேமலதாவுக்கும், அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறினார். திரும்பி செல்லும்போது மீண்டும் விஜயகாந்த்முகத்தை சில நொடிகள் பார்த்தபடி கண்கலங்கினார்.

தொடர்ந்து, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் ராமராஜன், பாலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x