Published : 28 Dec 2023 08:04 PM
Last Updated : 28 Dec 2023 08:04 PM

பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்: அண்ணாமலை

சென்னை: தமிழகம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக விஜயகாந்த் குடும்பத்தினர் அனுமதி பெற்று, அவரது உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும். மேலும், விஜயகாந்த்துக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி, அவருக்கான மரியாதை செலுத்த முன்வர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மக்கள் நலனையும், தேச நலனையும் விரும்பிய அற்புதமான தேசியவாதி, மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது மறைவு தமிழக அரசியலிலும், பொதுமக்கள் மனதிலும் நிரப்ப இயலாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துன்பம் என்று வந்தவர்கள் துயர் துடைத்த கரங்கள் அவருடையவை. உண்ணும் உணவில் வேறுபாடு காட்டாது, எளிய தொழிலாளர்களின் பசி தீர்த்த வள்ளல்.

உலகத் தமிழர்கள் அனைவர் அன்பையும் பெற்ற நடிகராகவும், களங்கமற்ற தலைவராகவும் விளங்கிய கேப்டன் மறைவுக்கு, கட்சி வேறுபாடின்றி அனைவருமே கலங்கி நிற்பது, அவரது வாழ்க்கை எனும் சகாப்தத்தின் பெருமை. ஆண்டுகள் பல இனி கடந்தாலும், அவர் புகழ் என்றும் மறையப் போவதில்லை.

தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும், பொதுமக்கள் பேரன்பைப் பெற்ற மகத்தான தலைவராகவும் விளங்கிய கேப்டன் விஜயகாந்தின் பூதவுடலுக்கு, தமிழக பாஜக சார்பாக மலரஞ்சலி செய்து, இறுதி மரியாதை செலுத்தி வணங்கினோம்.

தமிழகம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்று, அவரது உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், விஜயகாந்துக்கு மணிமண்டபம் கட்ட, தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி, அவருக்கான மரியாதை செலுத்த முன்வர வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x