Published : 28 Dec 2023 02:34 PM
Last Updated : 28 Dec 2023 02:34 PM

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு: சென்னை சிறப்பு விழாவில் முதல்வர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கேரள முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.

சென்னை: சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொண்டனர். “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” முதல்வர் ஸ்டாலின் வெளியிட, கேரள முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.28) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” வெளியிட, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

வரலாற்று சிறப்பிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றது.“வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி தமிழக அரசின் சார்பில் 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் 30.03.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.

சமூக நீதி வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த வைக்கம் போராட்டத்தினை பெரியார் முன்னின்று நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எல்லைக் கடந்து போராடி வரலாற்றில் பல புரட்சிகளை நிகழ்த்தி காட்டி வெற்றி கண்ட அவரின் நினைவைப் போற்றவும், அன்னாரின் சமூக நீதிக் கருத்துகளை பின்வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ளவும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகளை பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று அதனைத் தொகுத்து “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலர் ஒன்றினை தமிழக அரசின், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்ற ஒரு அறிவிப்பும் அதில் இடம்பெற்றிருந்தது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ், துணைத் தலைவராகவும், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், உறுப்பினர்-செயலராகவும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள் , செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர், தமிழரசு அச்சக இணை இயக்குநர்(வெளியீடுகள்) இரா.அண்ணா, தமிழரசு அச்சக உதவி இயக்குநர் அ.மகேஸ்வரி, தமிழரசு அச்சக உதவி பணி மேலாளர் தி.சுயம்புலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் கோமகன், மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன், தமிழறிஞர் பழ.அதியமான் ஆகியோர் ஆலோசகர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையால் இந்நூற்றாண்டு மலர் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கிணங்க, இக்குழு ஆலோசனைகளின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலரினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கேரள முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.

தமிழ் கட்டுரைகள்: இந்நூற்றாண்டு மலரில், பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்ட கால நிரல்’, கி.வீரமணி எழுதிய ‘கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வெற்றியைத் தழுவிய முதல் மனித உரிமைப் பேராட்டம்’, வே.ஆனைமுத்து எழுதிய ‘கேரளத்தில் ஏழு நாட்கள்’, வாலாசா வல்லவன் எழுதிய ‘அன்று இருந்த சூழ்நிலைகள்’, அ.கா.பெருமாள் எழுதிய ‘பெரியாரும் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டமும்’, பெருமாள் முருகன் எழுதிய ‘வைக்கம் போராட்டம்-வரலாற்றுச் சாதனை’, கோ.ரகுபதி எழுதிய ‘சமத்துவத்துக்கான விவாதங்கள்’, நிர்மால்யா எழுதிய ‘டி.கே.மாதவனுடன் ஒரு தலித் போராட்ட நாயகன்’, ப.திருமாவேலன் எழுதிய ‘வைக்கம் வீரர் மட்டுமல்ல, கேரள வீரர்’, கி.தளபதிராஜ் எழுதிய ‘விடை கொடுக்க மறுக்கும் வைக்கம் நினைவுகள்’, ஐஸ்வர்யா எழுதிய ‘வைக்கத்தில் ஈரோட்டுப் பெண்கள்’ போன்ற தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மலையாள கட்டுரைகள்: டி.டி.ஸ்ரீகுமார் எழுதிய ‘வைக்கம் சத்தியாகிரகத்தின் நூறு வருடங்கள்’, ரவி வர்மா தம்புரான் எழுதிய ‘கேரள மறுமலர்ச்சியில் தமிழ் மரபின் வேர்கள்-வைக்கம் சத்தியாகிரகம் பின்னணியில் ஒரு பார்வை’, சுரேஷ் மாதவ் எழுதிய ‘சிற்றேடத்து சங்குப் பிள்ளை-வைக்கம் சத்தியாகிரகத்தின் முதல் ரத்த சாட்சி’,கே.கே.கொச்சு எழுதிய ‘வைக்கம் சத்தியாகிரகம்-சாதி எதிர்ப்பும் பெரியாரும்’, ஓ.கே.சந்தோஷ் எழுதிய ‘வைக்கம் சத்தியாகிரகம்-வரலாறும் சமகாலமும்’, எஸ். ஷாஜி எழுதிய ‘சாதியமைப்பும் வைக்கம் சத்தியாகிராகமும்’ போன்ற மலையாள மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் மலையாள கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஆங்கிலக் கட்டுரைகள்: Robin Jeffrey எழுதிய ‘Temple entry Movement in Travancore, 1860-1940’, V.Balambal எழுதிய ‘E.V.R and Vaikom Satyagraha’,T.K.Ravindran எழுதிய ‘Eight Furlongs of Freedom’, Mary Elizabeth King எழுதிய ‘Gandhian Nonviolent Struggle and Untouchability in South India-The 1924-1925 Vaikom Satyagraha and Mechanisms of Change’, Sunny M.Kapikkad எழுதிய ‘Vaikom struggle-Historical Significance of Thanthai Periyar’,Pazha Athiyaman எழுதிய ‘Gandhi at Vaikom’ மற்றும் ‘Periyar the Hero of Vaikom’, K.A.Shaji எழுதிய ‘Vaikom Satyagraha-Thanthai Periyars role and his many differences with Gandhi’ போன்ற ஆங்கில கட்டுரைகள் இந்நூற்றாண்டு மலரில் இடம் பெற்றுள்ளன.

இவ்விழாவில், “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். முன்னதாக, பெரியாரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று (டிச.28) பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா, எதிர்கட்சி முன்னாள் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x