Published : 17 Jan 2018 09:06 AM
Last Updated : 17 Jan 2018 09:06 AM

உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை தேசிய அளவைவிட தமிழகத்தில் அதிகம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை தேசிய அளவைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 65-வது கூட்டம் டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பேசியதாவது:

மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக உலக அளவில் சிறந்த கல்வி முறைகளில் இந்திய கல்விமுறையும் ஒன்றாக விளங்குகிறது. ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வை காரணமாக இன்றைய தினம் உயர்கல்வித் துறையில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது. கடந்த 2016-17 அகில இந்திய உயர்கல்வி ஆய்வு அறிக்கையின்படி, உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 46.9 சதவீதம் ஆகும். இந்த எண்ணிக்கை தேசிய அளவில் 25.2 சதவீதமாக உள்ளது.

சாதாரண மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடந்த 7 ஆண்டுகளில் 4 புதிய பொறியியல் கல்லூரிகள், 17 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள், 29 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 27 புதிய பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 1,231 படிப்புகள் அறிமுகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிஎச்டி படிக்க கல்வி ஊக்கத்தொகை, மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏராளமான புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் காரணமாக தேசிய தரவரிசைப்பட்டியலில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, இளைஞர் நலன், விளையாட்டு ஆகிய துறைகளில் இதர மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x