Published : 04 Jan 2018 11:40 AM
Last Updated : 04 Jan 2018 11:40 AM

ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்

சிட்லப்பாக்கம் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.3 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சிட்லப்பாக்கம் பேரூராட்சி யில் தற்போது 40,000 பேர் உள்ளார்கள். இப்பகுதிக்கு தினமும் 35 முதல் 40 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இங்குள்ள குடிநீர் திட்டம் மூலம் 2 லட்சம் லிட்டர் மற்றும் பாலாற்று குடிநீர் திட்டம் மூலம் 9.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. தற்போது 7 நாட்களுக்கு இரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது.

இதற்குத் தீர்வுகாணும் வகையில் மாடம்பாக்கம் பெரிய ஏரியில் ரூ.3 கோடி மதிப்பில் ஐந்து புதிய கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசின் மூலதன நிதியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வரும் 10-ம் தேதி டெண்டர் விடப்பட உள்ளது.

கோடையில் வறட்சி

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

மழை பெய்தால் சிட்லப்பாக்கம் பகுதி நீரில் மிதக்கிறது. அதே போல் கோடைக்காலத்தில் தண்ணீர் இன்றி கடும் வறட்சி ஏற்படுகிறது.

இதற்காக ரூ. 3 கோடியில் இந்தக் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமும் 18 லட்சம் லிட்டர்

இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதில் 16 லட்சம் லிட்டர் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கும், 2 லட்சம் லிட்டர் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின்படி மாடம்பாக்கம் ஏரியில் 5 கிணறுகள் அமைக்கப்பட்டு, குழாய் மூலம் சிட்லப்பாக்கம் பேரூராட்சிப் பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. வரும் கோடைக்குள் இத் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x