Published : 17 Jan 2018 03:20 PM
Last Updated : 17 Jan 2018 03:20 PM

பெரிய பாண்டியனை நான் சுடவில்லை: போலீஸ் விசாரணையில் நாதுராம் வாக்குமூலம்

சமீபத்தில் பிடிபட்ட நாதுராம், தான் பெரியபாண்டியனை சுடவில்லை என்று கூறியதாக ராஜஸ்தான் போலீஸார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் கடந்த வாரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ராஜஸ்தான் மாநில எஸ்.பி தீபக் பார்கவ் தலைமையிலான போலீஸாரால் கடும் முயற்சிக்குப் பின் பிடிக்கப்பட்டார்.

பிடிபட்ட நாதுராமிடம் 12 மொபைல் போன்கள், போலி முகவரியுடன் கூடிய சுமார் 50 சிம் கார்டுகள் சிக்கின. வெகு ஜாக்கிரதையாக தன் செலவிற்கு பணம் தேவைப்படும்போது உறவினர்களுக்கு போன் செய்யும்போது பொதுமக்களிடம் இரவல் போன் கேட்டு நாதுராம் போன் செய்திருக்கிறார்.

சென்னை படையினரிடம் நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டபோது தப்பிய நாதுராம், பல மாநிலங்கள் சுற்றிய பின் கடைசியாக அகமதாபாத் வந்து தலைமறைவாக இருந்துள்ளார். தன் ஆண்ட்ராய்டு கைப்பேசியில் பல்வேறு எண்களை சாமர்த்தியமாக மாற்றிய நாதுராம் செய்த தவறு அதில் முகநூலையும் பயன்படுத்தியுள்ளதுதான்.

இது, சைபர் பிரிவினரிடம் அவர் சிக்க ஒரு முக்கியக் காரணமாகி உள்ளது. இதில் கடந்த வாரம் போலீஸருக்கு சவால் விடும் விதமாக கையில் துப்பாக்கியுடன் தனது படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துவிட்டு பின்னர் எதிர்ப்பு வந்தவுடன் அடுத்த சில நாட்களில் அதை அகற்றிய போது சைபர் பிரிவின் கண்காணிப்பில் நாதுராம் சிக்கினார்.

போராடி 13 கிலோ மீட்டர்  துரத்திப் பிடித்த போலீஸார் பின்னர் ராஜஸ்தான் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் பெரியண்டியன் கொல்லப்பட்டது பற்றியும் நாதுராம் வாய் திறந்துள்ளார்.

பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தன்னைச் சுற்றி வளைத்தபோது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தன்னைத்தான் சுடுகிறார்கள் என்று பயந்து ஓடிவிட்டதாகவும் நாதுராம் கூறியதாக ராஜஸ்தான் போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் மறைந்திருந்து போலீஸாரை தாக்கியது, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை பிடித்து வைத்துக்கொண்டு சுற்றிவளைத்துத்  தாக்கியது பற்றியெல்லாம் நாதுராம் கூறியதாக எந்த தகவலும் இல்லை.

நாதுராம் பிடிபட்டபோது அவரிடமிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட விவரம்  குறித்த தகவல் எதையும் ராஜஸ்தான் போலீஸார் கூறவில்லை. போலீஸாரைக் கண்டு தான் தப்பியோடியதாகவும், காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, தான் சுடவில்லை என்றும் நாதுராம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், நாதுராமை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ராஜஸ்தான் போலீஸார் சிறையில் அடைக்கவுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் விசாரணைக்காக கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி இருவரையும் அழைத்து வர சென்னையில் இருந்து தனிப்படை போலீஸ் ராஜஸ்தான் செல்கிறது. டிரான்சிட் வாரண்ட் போட்டு இருவரையும் சென்னை அழைத்து வர உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x