எண்ணூர் நிவாரண நிதி முதல் இந்திய கடற்பகுதி பரபரப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.23, 2023

எண்ணூர் நிவாரண நிதி முதல் இந்திய கடற்பகுதி பரபரப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.23, 2023
Updated on
3 min read

எண்ணூரில் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்: மிக்ஜாம் புயல் கனமழையின் தொடர்ச்சியாக, கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதமும், 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 வீதமும் வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகர். உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வீதம் மொத்தம் 5 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளம் வடிய வடிய வெளிவரும் பாதிப்புகள்: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது.

தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே ஒரு பாலமே முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வசவப்பபுரம் முதல் தூத்துக்குடி துறைமுகம் வரை சாலையில் பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதங்களை சரிசெய்ய பல கோடி ரூபாய் ஆகும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில்நகரமான தூத்துக்குடியில் கடந்த 5 நாட்களாக அனைத்து தொழில்களுமே முழுமையாக முடங்கி கிடக்கின்றன. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கோரம்பள்ளம் தொழில் பேட்டை என, மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து, இயந்திரங்கள், உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என, பல ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.

இதனிடையே தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்த காட்டாற்று வௌ்ளம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

தமிழகத்தில் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 29-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் இனி ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக வீரேந்தர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் தனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் நான் ஏற்கெனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டேன். இதற்குமேல் இது குறித்துப் பேச எதுவும் இல்லை என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த விவகாரம் வலுத்துள்ளது.

மம்தாவுக்கு பாஜக மகளிர் அணி தலைவர் வலியுறுத்தல்: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும் என்று அம்மாநில பாஜக மகளிரணி தலைவர் அக்னிமித்ர பால் கருத்து தெரிவித்துள்ளார்.

“அரசின் செயல் வேதனை தருகிறது”-‘எலி வளை’ தொழிலாளர்கள் அதிருப்தி: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பெரிதும் உதவிய ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள், அம்மாநில முதல்வர் தங்களுக்கு வழங்கிய ரூ.50,000-க்கான காசோலையை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வரின் செயல் தாங்கள் ஆற்றிய பணிக்கு ஏற்புடையதாக இல்லை. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தர வேலையே நாங்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்தோம் என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியக் கடலோரப் பகுதியில் ட்ரோன் மூலம் கப்பல் மீது தாக்குதல்: இந்தியக் கடலோரப் பகுதியில் ட்ரோன் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய லைபீரிய தேசிய கொடி ஏற்றிய அந்தக் கப்பல் மீது ஈரானில் செயல்படும் புரட்சிப் படை அல்லது ஹவுதி தீவிரவாத குழுவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

‘2023-ன் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடக்கும்’: 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்க 99% வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். முன்னதாக உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்!: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர், இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மும்பை அணிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in