சாயல்குடி நகருக்குள் திடீரென புகுந்த காட்டாற்று வெள்ளம் - முகாமில் பொதுமக்கள் தங்க வைப்பு

படம்:எல்.பாலச்சந்தர்
படம்:எல்.பாலச்சந்தர்
Updated on
2 min read

ராமநாதபுரம்: தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்த காட்டாற்று வௌ்ளம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

கடந்த வாரம் அதிகனமழை பெய்ததையொட்டி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வந்தடைந்த மழைநீர் கமுதி அருகே கோவிலாங்குளம் மற்றும் உசிலங்குளம் கண்மாய்கள் நிரம்பி சாயல்குடி கண்மாயை வந்தடைந்தது. மேலும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காட்டாற்று வௌ்ளம் இருவேலி கால்வாய் வழியாக சாயல்குடி நகர் பகுதிக்குள் புகுந்தது. இதனால் அண்ணாநகர், மாதவன் நகர், தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட நகர் பகுதிகள் வெள்ளக்காடானது.

படம்:எல்.பாலச்சந்தர்
படம்:எல்.பாலச்சந்தர்

இந்த தண்ணீரை வெளியேற்றக்கோரி நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனையடுத்து வருவாய்த் துறையினர் வாய்க்கால் தோண்டி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் நகரில் குடியிருப்பு பகுதிகள், கன்னியாகுமரி சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கிடக்கிறது.

குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்த அண்ணாநகர் உள்ளிட்ட மக்கள் அங்குள்ள திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த முத்துவேல்(65), அவரது மாற்றுத்திறனாளி மகன் மாரிமுத்து(33) ஆகியோர் தண்ணீருக்குள் தத்தளித்தனர். இவர்களை சாயல்குடி தீயணைப்புத்துறையினர் மீட்டு நிவாரண முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

படம்:எல்.பாலச்சந்தர்
படம்:எல்.பாலச்சந்தர்

இதுகுறித்து பாஜக சாயல்குடி முன்னாள் ஒன்றிய தலைவர் நிர்வாகி சத்தியமூர்த்தி கூறும்போது, “வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பும், வடிகால் பகுதிகளில் அரசு வீட்டு மனை பட்டா வழங்கியதும், குழையிருப்பான் கண்மாய் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு மாணவ, மாணவிகள் விடுதிகள், தீயணைப்புநிலையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டிடடங்கள் கட்டியதும் நகர் தண்ணீர் வெளியேற முடியவில்லை. அதனால் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றி நகர் மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், வெள்ளம் புகுந்த சாயல்குடி பேரூராட்சி பகுதிகள், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் ஆகியவற்றை பார்வையிட்டார். ஆட்சியர் கூறும்போது, “தற்பொழுது வெள்ளநீர் சாயல்குடி கண்மாயிலிருந்து கழுங்கு பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் சாயல்குடி நகர் பகுதிக்குள் வந்த தண்ணீர் வெளியேற்றப்படும். தற்சமயம் அப்பகுதி மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு, உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in