Published : 23 Dec 2023 04:52 PM
Last Updated : 23 Dec 2023 04:52 PM

“மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை” - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தருமபுரி: தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தருமபுரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று (டிச., 23) தருமபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை கடந்த மூன்று மாதங்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதியிலும் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் அண்மைக்கால கன மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அப்பகுதி மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இவ்வாறு மக்கள் பெரும் இயற்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவதை தவிர்த்து, நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் சிலர் செயல்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது. நாடாளுமன்றத்தை முடக்க முயன்றது, நாடாளுமன்ற மேலவையின் தலைவரை அவதூறாக சித்தரித்தது ஆகியவை சிறுபிள்ளைத்தனமான செயல். வெள்ள பாதிப்புக்கு உள்ளான மக்கள் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட உணராமல், தமிழக அரசு வானிலை மையத்தை குறை கூறிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண பொருட்களை வாங்கவும் நிவாரண உதவித் தொகை பெறவும் வரிசையில் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. சீரமைப்புப் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணி ஆகியவற்றில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சுடன் மேற்கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்ட பாசன தேவைக்கு பயன்படும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். நடப்பாண்டில் தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் இந்த மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வேர்ப் புழு தாக்குதலால் தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி 50% சேதமடைந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தருமபுரி வெண்ணாம்பட்டி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவுகளில் அதிக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தருமபுரி ஓசூர் இடையே பாலக்கோடு வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை பின்பற்றாமல் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியை கைவிட வேண்டும். தருமபுரி-மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்ரு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின்போது அக்கட்சியின் மாநில நிர்வாகி யுவராஜ், தருமபுரி மாவட்ட தலைவர் புகழ், நிர்வாகிகள் பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x