Published : 20 Dec 2023 09:51 PM
Last Updated : 20 Dec 2023 09:51 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதாகவும், நீர் வடிந்ததும் பாதிக்கப்பட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் மிளகாய், மல்லி, வெங்காயம் மற்றும் நெல், சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படும் நெல்பயிரே அறுவடைக்கு 10 முதல் 20 நாட்கள் உள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் அதிகளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல் மழை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காட்டாற்று வெள்ளத்தால் கடலாடி தாலுகாவிலும் மற்றும் மாவட்டத்திலும் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிர்கள் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து திருவெற்றியூரைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் கூறும்போது, “தொடர் மழையால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுகிய கால ரகமான ஆர்என்ஆர், 909, ஜோதி மட்டை ஆகிய நெல் ரகங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரியைச் சேர்ந்த விவசாயி மைக்கேல் கூறும்போது,“முதுகுளத்தூர் தாலுகாவில் பல கிராமங்களில் நெல், மிளகாய் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தனுஷ்கோடி கூறும்போது, “மாவட்டத்தில் இந்தாண்டு 1,39,693 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பெய்த தொடர் மழையால் 7 ஆயிரம் ஹெக்டேர் நெல் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதில் பெரும்பாலும் மழைநீர் வடிந்து வருகிறது. மழைநீர் வடிந்ததும், பயிர்கள் பழைய நிலைக்கு வந்துவிடும். அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. 10 சதவீதம் பயிர்கள் பாதிக்கப்படலாம். ஒரு வாரம் கழித்து பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT