Published : 18 Dec 2023 08:54 AM
Last Updated : 18 Dec 2023 08:54 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக் கிழமை மாலை வரை மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவமனை சாலை, அக்ரஹாரம் ரோடு, தங்கப்பாபுரம், வசந்த நகர், காட்டூரணி, பாரதி நகர், பட்டணம் காத்தான், ஓம் சக்தி நகர், நாகநாதபுரம் ஆகிய தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம்போல காணப்பட்டது.

ராமநாதபுரம் - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பட்டணம் காத்தானில் நேற்று பெய்த மழையில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள். நகரின் பிரதான சாலையான அரசு மருத்துவமனை சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி போக்குவரத்துக்கு சிரமமாக இருந்தது.

அதிகபட்சமாக தீர்த்தாண்ட தானத்தில் 81.40 மி.மீ, வட்டானத்தில் 73.20, ராமநாதபுரத்தில் 56.00 மி.மீ, திருவாடானையில் 45.80 மி.மீ. கடலாடியில் 41.00 மி.மீ, மண்டபத்தில் 37.00 மி.மீ. மழை பதிவானது. மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்ற அறிவிப்பால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று விசைப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x