Last Updated : 20 Dec, 2023 09:52 PM

 

Published : 20 Dec 2023 09:52 PM
Last Updated : 20 Dec 2023 09:52 PM

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாக வெள்ளத்தில் ஆவணங்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடுமையாக பாதிக்கப்பட்டது | படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கின்றன. வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வேட்டி, சேலைகள் சேதமடைந்துள்ளன.

ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த தண்ணீர்: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையோர பகுதிகளில் குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள்ளும் தண்ணீர் புகுந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அவசரகால செயல் மையம், குழந்தைகள் உதவி மையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

7 அடி உயரத்துக்கு தேங்கிய தண்ணீர்: இந்த அலுவலகங்களில் 7 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. 36 மணிநேரத்துக்கு தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருந்ததால் மேஜை, இருக்கைகள், பீரோக்கள் உள்ளிட்ட மரச்சாமான்கள், கணினி, பிரிண்டர், லேப்டாப், டிவி, சர்வர்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. முக்கியமாக அனைத்து அலுவலகங்களிலும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தண்ணீரில் ஊறி சேதமடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு காணப்படுகிறது. தண்ணீருடன் சேறும் சகதியுமாக காணப்பட்ட இந்த அலுவலகங்களில் துப்புரவு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. சேதமடைந்த பொருட்களை வெளியே தூக்கி தரைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் கொசுத்தொல்லை காரணமாக புகைமருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்றது.

வேட்டி சேலைகள் சேதம்: பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கலுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள், ஆதார் மையம் மற்றும் இ.சேவை மையங்களில் வைத்திருந்த ஸ்கேன் செய்யும் கருவிகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களும் நாசமாகியிருந்தன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மட்டும் 35 கணினிகளும், 15 பிரிண்டர்களும் சேதமடைந்ததாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆவணங்கள், கோப்புகள் சேதமடைந்தன: பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களும், கோப்புகளும் நாசமாகியிருப்பதால் பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் என்ன பதிலளிக்க உள்ளனர் என்பது அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இந்த அலுவலகங்களுக்கான மின்மோட்டார்கள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியிருக்கிறது. ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்வான இடங்களில் இன்றும் தண்ணீர் தேங்கியிருந்தது. பாதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் அலுவலக பணிகள் சகஜமாக இன்னும் பலநாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

3 நாட்களுக்குப் பின் ரயில் சேவை... திருநெல்வேலியில் 3 நாட்களுக்குப்பின் ரயில் போக்குவரத்து இன்று படிப்படியாக தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் பெய்த அதிகனமழையால் பல்வேறு இடங்களிலும் தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி டவுன் நயினார்குளம் நிரம்பி அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புகுந்து தண்டவாளங்களையும், நடைமேடைகளையும் மூழ்கடித்தது. இதனால் இங்கிருந்து ரயில்களை இயக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீரை வடியவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் இருந்து தண்ணீர் அகற்றப்பட்ட நிலையில் இன்று முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ், பெங்களூரிலிருந்து திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து திருநெல்வேலி வழியாக செல்லும் கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வழக்கம்போல் வந்து சென்றன.

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே மட்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. செங்கோட்டை- திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரங்களில் இருமார்ரக்கங்களிலும் இயக்கப்பட்டன. திருநெல்வேலி- நாகர்கோவில், திருநெல்வேலி- வாஞ்சிமணியாச்சி ரயில்கள் இயக்கப்படவில்லை. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை இயக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்றது.

500 ஏக்கர் வாழை சேதம்: களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்குமுன் 24 மணிநேரமும் கொட்டித் தீர்த்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் பெருமளவுக்கு தேங்கி ஆறுபோல் காட்சியளித்தது. இதில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. வாழைத்தோட்டங்களில் தேங்கிய தண்ணீர் வடியாமல் இருந்ததால் வாழைகள் சாய்ந்தன. களக்காடு, மேலப்பத்தை, கீழப்பத்தை, மூங்கிலடி, சிவபுரம், கள்ளியாறு, சிதம்பரபுரம், சந்திரங்காடு, சாலைப்புதூர், திருங்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழைகள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.30,000 இழப்பீடு வழங்க கோரிக்கை: இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணை தலைவர் பி. பெரும்படையார் கூறியதாவது: "களக்காடு வட்டாரத்தில் மட்டும் 500 ஏக்கரில் பயிரிட்டிருந்த ஏத்தன், ரசகதலி ரக வாழைகள் மழையால் சாய்ந்துவிட்டன. குலைதள்ளும் பருவத்தில் வாழைகள் சாய்ந்துள்ளது விவசாயிகளுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாதிப்பு குறித்து அரசு உரிய கணக்கெடுப்பு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சீராகாத தொலைத் தொடர்பு சேவை: திருநெல்வேலி மாநகரில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் 75 சதவிகிதம் அளவுக்கே தொலைத்தொடர்பு சேவைகள் சீராகியிருக்கிறது. 25 சதவிகிதம் சேவைகள் சீராகவில்லை. மாநகரில் வெள்ளத்தால் பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல், ஜியோ, ஓடோபோன் உள்ளிட்ட தனியார் நிறுவன தொலைத்தொடர்பு சேவைகளும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டன.

25% பகுதிகளில் சீராகவில்லை: இந்நிலையில் இந்த பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளில் தொலைத்தொடர்பு நிறுவன பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் திருநெல்வேலி டவுன் பகுதிகளில் இன்னமும் தொலைத்தொடர்பு சேவைகள் சீராகவில்லை. இதுபோல் கேபிள் டிவி இணைப்புகளையும் வழங்க முடியவில்லை. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் இன்னமும் மின்சார விநியோகம் தொடங்கப்படாத நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை மீண்டும் வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஏர்டெல் நிறுவன பொறியாளர் பி. சதீஷ் கூறும்போது, ஏர்டெல், ஜியோ, ஓடோபோன் நிறுவனங்களின் சேவைகள் 75 சதவிகிதம் அளிக்கப்பட்டுவிட்டது. 5 ஜி சேவை அளிக்கப்பட்டிருக்கிறது. மாநகரில் பிஎஸ்என்எல் 2 ஜி சேவை கிடைக்கிறது. மாநகரம் முழுக்க 75 சதவிகிதம் அளவுக்கு தொலைத்தொடர்பு சேவை அளிக்கப்பட்டுவிட்டது. நிலைமை சீராகிவருவதால் இன்னும் சில நாட்களில் மீதமுள்ள 25 சதவிகித பகுதிகளுக்கும் தொலைத்தொடர்பு சேவைகள் அளிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.

181.20 மி.மீ. மழைப்பதிவு: திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் மொத்தம் 181.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, களக்காடு- தலா 1 மி.மீ, மணிமுத்தாறு- 2, பாபநாசம்- 14, சேர்வலாறு- 7, கன்னடியன் அணைக்கட்டு- 2.20, மாஞ்சோலை- 25, காக்காச்சி- 38, நாலுமுக்கு- 42, ஊத்து- 47மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

அணைகளின் நீர்மட்டம்: 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 140.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4779 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2554 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 153.54 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 112.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3265 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டுள்ளது.

வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பியிருக்கின்றன. 49.20 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு நிரம்பியுள்ளதால் அணைக்குவரும் 338 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. இதுபோல் 22.96 அடி உச்சநீர்மட்டம் கொம்ட நம்பியாறு நிரம்பியிருப்பதால் அணைக்கு வரும் 1810 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பியிருக்கும் நிலையில் அணைக்குவரும் 115 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x