Last Updated : 20 Dec, 2023 09:09 PM

2  

Published : 20 Dec 2023 09:09 PM
Last Updated : 20 Dec 2023 09:09 PM

“எச்சரிக்கை விடுத்திருந்தால் உடுத்த துணியாவது மிஞ்சியிருக்கும்” - தாமிரபரணி கரையோர மக்கள் கண்ணீர் @ நெல்லை வெள்ளம்

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததைத் தொடர்ந்து கரையோரப் பகுதி வீடுகளைச் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்துள்ளது. | படங்கள்: மு.லெட்சு அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கவில்லை. இதனால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக பாதிக்கப்பட்ட கண்ணீர் விடுகிறார்கள். அதேநேரம், மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப தேவையான பல்வேறு நடவடிக்கைகளும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாமிரபரணியில் கரைபுரண்ட வெள்ளம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் கடந்த 3 நாட்களுக்குமுன் பெருமளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்ததால் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்புகள் நேரிட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரில் கொக்கிரகுளம், குருந்துடையார்புரம், கைலாசபுரம், மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், மேகலிங்கபுரம், உடையார்பட்டி உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதிகளில் பலஇடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் சின்னபின்னமாகியிருக்கின்றன.

வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்ததில் பாலத்தையொட்டி இருந்த குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் மாநகரிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்திருப்பதால் இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அரசுத் துறைகள் மேற்கொண்டன. நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலத்தில் தேங்கிய சகதியை அகற்றி, டேங்கர் லாரி மூலம் தண்ணீரை ஊற்றி கழிவிவிடும் பணிகள் இன்று நடைபெற்றது.

மாநகரில் ஆற்றங்கரையோர பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையோரத்தில் மின்மாற்றி சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் இன்று வரை மின்சார விநியோகம் சீராகவில்லை. இப்பகுதிகளில் உள்ள ஒர்க்ஷாப்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள் பலவும் கடும் சேதமடைந்துள்ளன. திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தின் வடபுறம் மதுரை சாலையில் தேங்கி வெள்ளம் வடியவில்லை. இதனால் அவ்வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள், தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் வடிந்திருந்த நிலையில் தங்கள் வீடுகளுக்கு சென்று சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத பொருட்களை குப்பைகளாக வெளியே கொட்டினர். மேலும் நனைந்து சேதமடைந்த ஆவணங்கள், துணிமணிகளை வெயிலில் உலர்த்தினர்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் கூட்டுறவு நகர வங்கியில் வெள்ளம் புகுந்ததில் அங்குள்ள ஆவணங்கள், கோப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதுபோல் கணினி உள்ளிட்ட பொருட்களும் நாசமாகிவிட்டன. அதேநேரத்தில் லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் நகைகள் மற்றும் ரொக்கம் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
ஆற்றங்கரையோர பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும், இளைஞர்களும் வாகனங்களில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டுவந்து வழங்கி வருகிறார்கள்.

மக்கள் கண்ணீர்... - திருநெல்வேலி கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவில் வீடுகள் அனைத்தும் மூழ்கியதால் அங்கிருந்த உடமைகள் அனைத்தும் சேதமடைந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். படிக்கும் பிள்ளைகளின் புத்தகங்கள், அவர்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டதால் புதிய புத்தகங்கள், சான்றிதழ்களை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். திருநெல்வேலி குருந்துடையார்புரத்திலிருந்து காமராஜர்புரம் செல்லும் பிரதான சாலையில் உள்ள பாலம் முற்றிலும் உடைந்து சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் பகுதி தீவாக மாறியிருப்பதாக காமராஜர்புரம் பகுதி மக்கள் தெரிவித்தனர். பாலத்தை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இப்பகுதியில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் 75 ஆண்டுகள் பழமையான ஆலமரமும் சரிந்து விழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஆற்றங்கரையோர பகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் முன்கூட்டியே வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ”“காவல் துறையினரோ எங்கள் பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்து எச்சரித்திருந்தால் உடுக்க துணியாவது எஞ்சியிருக்கும். உடுக்க துணயில்லாமல் கடந்த 5 நாட்களாக ஒரே துணியை அணிந்திருக்கிறோம். குடிக்க தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை" என்று வண்ணார்பேட்டை சாலைத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் கண்ணீர்விட்டார்.

"1992-ல் வெள்ளம் வந்தபோது முன்கூட்டியே எச்சரித்ததால் பலரும் தங்களது உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். அப்போது முட்டளவுக்கு மட்டுமே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்போது 7 அடி அளவுக்கு வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கிவிட்டது. இப்போது யாரும் எச்சரிக்கவில்லை. இதனால் பலரும் மெத்தனமாக வீடுகளில் இருந்துவிட்டனர். எனவே, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துவிட்டன" என்று இப்பகுதியை சேர்ந்த பட்டன் தெரிவித்தார்.

வெள்ள சேதம் கணக்கெடுப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்கலாம். ஆதார் எண் மற்றும் தங்கள் உரிய விபரங்களை அளிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாத பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கலாம். அரசின் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

65 நிவாரண முகாம்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்ட 4424 பேர் 65 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 11 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழைக்கால தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்காக 113 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

வாகனங்கள் பழுது... - மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம். வாகனத்தின் தன்மை குறித்து அறியாமல் இயக்குவதால் வாகனத்தில் கூடுதலான பழுதுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பழுதான வாகனங்கள் குறித்து நிறுவனங்களுக்கோ அல்லது டீலர்களுக்கோ தகவல் தெரிவித்தால் அவர்கள் மீட்பு வாகனங்களில் வாகனங்களை எடுத்துச் சென்று பழுது நீக்கம் செய்து, சீர் செய்த பின்னரே இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட தூய்மைப் பணியாளர்கள்: திருநெல்வேலி மாநகராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற மதுரை, ராமேஸ்வரம், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து மினிலாரிகள், ஆட்டோக்களுமாக 15-க்கும் மேற்பட்ட வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தூய்மை பணியாளர்கள் மாநகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் பிளீச்சிங் பவுடர்களும் தூவப்படுகின்றன. அத்துடன் கொசு மருந்தும் அடிக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ்கள் உடன் 70 மருத்துவக் குழுக்கள்: தொடர் மழையால் பெரும் பாதிப்படைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து 13 நாடமாடும் மருத்துவ குழுக்களை முதலுதவி மற்றும் மருத்துவ பணிகள் புரிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுபோல் திண்டுக்கல் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து தலா 7 குழுக்கள், பரமகுடியிலிருந்து 3 குழுக்கள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவகங்கையிலிருந்து 12, தேனியிலிருந்து 8, பழனியிலிருந்து 7, பரமகுடியிலிருந்து 3 குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்துக்கு அறங்தாங்கியிலிருந்து 5 குழுக்களும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ராமநாதபுரத்திலிருந்து 5 குழுக்களும் வந்துள்ளன.இக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை ஆற்றுவதற்காக அந்தந்த பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் அந்தந்த மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் தலைமையில் பணிகளை மேற்கொள்கின்றன.

தூத்துக்குடியில் மத்திய குழுவினர் ஆய்வு: இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்தக் குழு, பல்வேறு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. மழை பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர். மத்திய குழுவினர் தங்கள் ஆய்வு குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளிக்கவுள்ளனர். அந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளம் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு 27 டன் உணவு விநியோகம் - “தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டது. மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு என ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கிருந்து உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டரில் ஏற்றி உணவுகள் விநியோகிக்கப்பட்டது. இதுவரை, கிட்டத்தட்ட 27 டன் அளவிலான உணவு மக்களுக்கு விநியோகித்துள்ளோம்” என்று முதல்வர் உடனான ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுரை: முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x