Published : 20 Dec 2023 05:28 AM
Last Updated : 20 Dec 2023 05:28 AM

பள்ளி மாணவர்கள் கையில் இருசக்கர வாகனம்: ஆபத்தை தவிர்க்க பெற்றோரின் கண்டிப்பு அவசியம்

சென்னை: பள்ளி பருவத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, சிறு வயதில் இருந்தே அவர்களை கண்டிப்புடன் பெற்றோர் வளர்க்க வேண்டும் என குழந்தை உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே பள்ளி பருவத்தின்போது சிறார்கள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுத்தும் விபத்துகள், அதிர்ச்சியடையச் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.

அம்மாவட்டத்தின் ஜி.நாகமங்கலத்தைச் சேர்ந்த கிரி(17) தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் அஜய்(15), ராகவன்(14) ஆகியோருடன் சென்ற நிலையில் மூவருமே சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதேபோல், இதற்கு முன்னதாக நடந்த பல சம்பவங்களில், சிறார்கள் இயக்கிய வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் தவறிழைக்காத பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்போது, "பெற்றோரின் அலட்சியமே இ‌ந்த 3 மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம். மேலும், கடுமையான சட்டங்களை அமல்படுத்தி தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. இல்லையேல் பல குழந்தைகளை நாம் பலி கொடுக்க நேரிடும்" என்றார்.

அதேநேரம், சிறார்களால் ஏற்படும் விபத்துக்கு முக்கிய காரணம் பெற்றோரே என்பதுதான் நிதர்சனம். குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதாக எண்ணி, தங்களுக்கும் பிறருக்கும் ஏற்படவிருக்கும் இழப்பை உணராமல் இரு சக்கர வாகனங்களை வாங்கித் தருகின்றனர். இது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்தாக வேண்டும் என குழந்தை உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக குழந்தை உரிமை ஆர்வலர் வைகுந்த் கஸ்தூரி ரங்கன் கூறியதாவது: தற்போதைய தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் இடைவெளி உள்ளது. இதனால் குழந்தை வளர்ப்பு என்பதில் சவால்கள் உள்ளன. எனவே, சிறு வயதில் இருந்தே கண்டிப்புடன் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே வளரிளம் பருவத்தில் பெற்றோரின் வார்த்தைகளுக்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள். சரி, தவறுகளை குழந்தைகளுக்கு தெளிவாகக் கூறி புரிய வைக்கும் மனதிடம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

குழந்தைகள் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது. அதேநேரம், பெற்றோரால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. பாடத்திட்டம், ஆசிரியர், சமூகம், ஊடகம் என அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வு வாயிலாக பங்களிப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மோட்டார் வாகனச் சட்டப்படி, ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும், 25 வயது வரை சம்பந்தப்பட்ட சிறாரால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்பன உள்ளிட்ட 5 தண்டனைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை கண்டிப்புடன் வளர்த்தால் மட்டுமே வளரிளம் பருவத்தில் பெற்றோரின் வார்த்தைகளுக்கு அவர்கள் மதிப்பு அளிப்பர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x