Published : 12 Jan 2018 08:16 AM
Last Updated : 12 Jan 2018 08:16 AM

உடனடியாக பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு: பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்- ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமனம்

உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

போக்குவரத்து சீரானது:

போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின. பொங்கல் விடுமுறை தொடங்கியதால் மக்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்தால் அரசு பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் மக்கள் நலன் கருதி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், போராட்டம் 8-வது நாளாக நேற்றும் நீடித்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதி பதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. அப்போது நடந்த விவாதம்:

தொழிற்சங்க தரப்பு வழக்கறிஞர்கள்: மனசாட்சியுடன் முடிவு எடுங்கள் எனக்கூறி பந்தை எங்களது பக்கம் திருப்பி விட்டீர்கள். நாங்களும் நிபந்தனையுடன் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம். ஊதிய முரண்பாடான 0.13 காரணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளான என்.பால்வசந்தகுமார், பி.சண்முகம், கே.என்.பாஷா இவர்களில் யாராவது ஒருவரை சமரச தீர்வாளராக நியமிக்க வேண்டும். ஜன.4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும். போராட்ட காலத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். வேலைநிறுத்த காலத்துக்கும் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு தலைமை வழக்கறிஞர்: ஊதிய முரண்பாடு குறித்து சமரச தீர்வாளரை நியமிப்பது தொடர் பாக மட்டும் அரசுடன் கலந்து ஆலோசிக்கிறேன். ஆனால், மற்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது.

(இதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் 2.45-க்கு விசாரணை தொடங்கியது)

அரசு தலைமை வழக்கறிஞர்:

0.13 காரணி ஊதிய முரண்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சமரச தீர்வாளராக ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவை நியமிக்கலாம். மற்ற நிபந்தனைகளை ஏற்க முடியாது.

நீதிபதிகள்: (தொழிற்சங்க தரப்பைப் பார்த்து) முதலில் ஊதிய முரண்பாடு மட்டும்தான் உங்களின் கோரிக்கையாக இருந்தது. தற்போது புதிது, புதிதாக நிபந்தனைகளை விதிக்கிறீர்கள். மக்கள் படும் கஷ்டம் உங்களுக்கு புரிகிறதா, கடந்த 7 ஆண்டுகளாக தொழிற்சங்க நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அரசு தலைமை வழக்கறிஞர்: இந்த வழக்கு கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது என்றும் நிர்வாகத்துக்கு எதிராக முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு துணிச்சல் கிடையாது என்றும் போராட்டத்துக்கு மட்டும் ஒருதலைபட்சமாக தடை விதிக்கிறது என்றும் நீதிமன்றத்தை விமர்சித்து தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம்?

நீதிபதிகள்: (கோபமடைந்து) தொழிற்சங்ச நிர்வாகிகள் இஷ்டத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் பேசுவதா. இந்த வழக்கு 6 மாதமாகவா நிலுவையில் உள்ளது. தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகை நெருங்கும்போதும் தொழிலாளர்களின் நிலையைப் புரிந்து பல நூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை யை வழங்க நாங்கள்தான் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தோம். யாருக்குத் துணிச்சல் இருக்கிறது என்பதை இந்த வழக்கு முடியட்டும், பார்த்துக்கொள்ளலாம். இதுபோன்ற பேச்சுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுதொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் தனியாக மனு தாக்கல் செய்யுங்கள். விசாரிக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

அதன்பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்காத வண்ணம் உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரியிருந்தோம். அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் 0.13 காரணி ஊதிய முரண்பாடு குறித்தும் இந்த ஊதிய உயர்வு எப்போது முதல் அமலாகும் என்பது குறித்தும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இ.பத்மநாபனை சமரச தீர்வாளராக நியமிக்கிறோம். அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பொங்கலை முன்னிட்டு போராட்டத்தை கைவிட்டு உடனடியாக தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவு தொடர்பாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் மக்கள் நலன் கருதி வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் இன்று பணிக்குத் திரும்புகின்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால், இன்று முதல் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும். சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். போராட்டத்தால், அரசுக்கு சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு பணி வழங்குவது பற்றி நிர்வாகம்தான் முடிவு செய்யும்’’ என்றார்.

இதனிடையே நீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசித்த பின்னர், பல்லவன் இல்லம் முன்பு திரண்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் பேசினர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாகவும், உரிமைகளைப் பெற தொடரந்து போராடுவோம் என்றும் கூறி வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று காலை முதல் வழக்கம்போல பேருந்துகள் இயங்கும். வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நீதிபதி இ.பத்மநாபன்

சமரச தீர்வாளராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி இ.பத்மநாபன், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை 2 முறை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். டான்சி, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், சொத்துக்குவிப்பு வழக்குகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விசாரிக்க அன்றைய ஆளுநர் எம்.ஃபாத்திமா பீவி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த 3 ரிட் மனுக்களை 1997-ல் தள்ளுபடி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x