Last Updated : 18 Dec, 2023 08:30 PM

 

Published : 18 Dec 2023 08:30 PM
Last Updated : 18 Dec 2023 08:30 PM

ராமநாதபுரத்தில் கனமழைக்கு விவசாயி உயிரிழப்பு; சாயல்குடியில் 15,000 ஏக்கரில் பயிர்கள் சேதம்

சாயல்குடி அருகே வெள்ளம்பலில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த விவசாயி வேலுச்சாமி.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். சாயல்குடி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், மல்லி, வெங்காயம், சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின. 50 செம்மறி ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலை துண்டிக்கப்பட்டதால் 10 கிராம மக்கள் வீடுகளில் முடங்கினர்.

2 நாட்களாக கனமழை: தென் மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக மாவட்டத்திலுள்ள 70 சதவீத கண்மாய், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. ஆறுகள், ஓடைகள், வரத்து கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் காட்டாறு வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கி வருகிறது.

போக்குவரத்து முடக்கம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றியத்தை சேர்ந்த லட்சுமிபுரம், மாவிலோடை பகுதிகளிலிருந்து நீர்வழித் தடங்களில் தண்ணீர் நிரம்பி அது வெளியேறி காட்டாறு வெள்ளமாக கஞ்சம்பட்டி ஓடையில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தரைக்குடியிலிருந்து செவல்பட்டி செல்லும் சாலை மற்றும் கொண்டுநல்லான்பட்டி வழியாக உச்சிநத்தம் செல்லும் சாலை ஆகிய இரண்டு பிரதான சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்தின்றி முடங்கின.

சாயல்குடி அருகே செவல்பட்டி கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்.

பயிர்கள் சேதம்: இப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், மல்லி, வெங்காயம் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. அப்பகுதியில் அடையப்போட்டிருந்த செம்மறி ஆடுகளில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு, இறந்து ஆங்காங்கே மிதந்து வருகிறது. இப்பகுதியில் கொண்டுநல்லான்பட்டி உள்ளிட்ட கிராமங்களை ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் அறுவடை நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

ஆடுகள் சிக்கித்தவிப்பு: முதுகுளத்தூர் அருகே நல்லுக்குறிச்சியை சேர்ந்த மணி என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில், தாழ்வாரத்தில் அடைந்திருந்த வெள்ளாடுகள் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தது. கமுதி அருகே பெருநாழி திம்மநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 5 விவசாயிகள் நேற்று ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அப்பகுதி வழித்தடத்தில் தீடீரென காட்டாறு வெள்ளம் வந்ததால் ஆடுகளுடன் பரிதவித்தனர். சாயல்குடி தீயணைப்புத்துறையினர் 5 விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆடுகளை பாதுகாப்பாக மீட்டு கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

விவசாயி உயிரிழப்பு: சாயல்குடி அருகே வெள்ளம்பல் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி(68). இவர் நேற்று காலை குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார். அப்போது பெய்த மழையில் அவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வேலுச்சாமி உயிரிழந்தார். அருகில் இருந்த அவரது மகள் பொன்னுத்தாய்(30) படுகாயமடைந்தார். சாயல்குடி போலீஸார் மற்றும் தீயணைப்பு, மீட்பு குழுவினர் பொன்னுதாயை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வேலுச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x