

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9.2 செ.மீ கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. திருச்செந்தூரில் 67 செ.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் விழுவதை விட அதிகமான அளவு). இது தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். இது புயல் கூட இல்லை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லை. ஒரு புயல் சுழற்சியில் இருந்து பெய்யும் மழை. இது 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992-ல் மாஞ்சோலை2யில் பதிவான 965 மி.மீ மழைக்கு 2வது அதிக மழையும் ஆகும்” இவ்வாறு வெதர்மேன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே பல இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பல இடங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.