Published : 22 Jan 2018 09:34 AM
Last Updated : 22 Jan 2018 09:34 AM

சென்னை மாவட்ட விரிவாக்கத்தால் திட்டப் பணிகளில் மாநகராட்சி விரைந்து முடிவெடுக்க முடியும்: திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் மக்களுக்கு நிம்மதி

சென்னை மாநகராட்சிக்கு இணையாக சென்னை மாவட்ட எல்லை விரிவாக்கப்பட்டுள்ளதால் இனி திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முடிவெடுக்க முடியும்.

சென்னை மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு 176 சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்ததால் சென்னையில் இருப்பது போன்று பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை அங்கும் ஏற்படுத்த வேண்டியிருந்தது. அதற்காக கடந்த 2011-ம் ஆண்டு சென்னையைச் சுற்றி இருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால் சென்னை மாநகராட்சியின் எல்லை 426 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்தது. அதே நேரத்தில் சென்னை மாவட்ட நிர்வாகத்தின் எல்லை விரிவாக்கப்படவில்லை.

இதனால் சென்னை மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு திட்டப்பணிகளை 3 மாவட்ட ஆட்சியர்களையும் கலந்து ஆலோசித்து செயல்படுத்தவேண்டி இருந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லையில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருந்த திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய 4 தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருந்த ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 2 தாலுகாக்கள் தற்போது சென்னை மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன. இதனால் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அலைச்சல் குறைந்து நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சிக்கும் நிர்வாக ரீதியில் நன்மை பயக்கக்கூடியதாக உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது:

இதற்கு முன்பு நிலம், பட்டா தொடர்பாகவும், சமூகநலத் திட்டங்களுக்கான சான்றுகள் பெறுவதில் சிக்கல் இருப்பின் இணைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், சுமார் 70 கிமீ தொலைவில் உள்ள காஞ்சிபுரத்துக்கோ, திருவள்ளூருக்கோ செல்ல வேண்டி இருந்தது. இனி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துவிடலாம். இப்பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகள் தற்போது சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சாலையோ, பாலமோ அமைக்க வேண்டும் என்றாலும், நிலம் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செயல்படுத்த வேண்டும் என்றாலும், இதற்கு முன்பு 3 மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டி இருந்தது. இனி சென்னை மாவட்ட ஆட்சியருடன் மட்டும் கலந்தாலோசித்து விரைந்து முடிவெடுக்க முடியும் என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “முன்பு தேர்தல் பணிகள் தொடர்பான கூட்டங்களுக்கு, மாநகராட்சி அதிகாரி கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டி இருந்தது. இனி அனைத்து தேர்தல் பணிகளையும் மாநகராட்சி நிர்வாகமே மேற்கொள்ளும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x