Published : 17 Dec 2023 04:57 AM
Last Updated : 17 Dec 2023 04:57 AM

எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்: சிபிசிஎல் நிறுவனத்துக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: சிபிசிஎல் நிறுவனத்தில் இனிவரும் காலங்களில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் பகுதியில் படர்ந்துள்ள பெட்ரோலிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் குறித்து அவர் கூறியதாவது: எண்ணூரில் கரையோரப் பகுதிகளில் படிந்திருந்த 200 டன் எண்ணெய் கழிவுகள் அற்றப்பட்டுள்ளன. ஆற்று பகுதியில் நீர் பரப்பில் படர்ந்திருந்த 15.5 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

கழிவுகளை அகற்றும் பணியில் 110 படகுகள் மூலம் 450 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனியார் வல்லுநர் தலைமையில் 80 பேரும் மும்பையிலிருந்து 55 பணியாளர்களுடனும் வந்துள்ள ஒரு அமைப்பும் கழிவுகளை அகற்ற களமிறங்கியுள்ளது.

எண்ணெய் கசிவால், அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

கழிவுகளை அகற்றம் பணிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமல்லாது, அனைத்துத் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். இதன்மூலம் ஓரளவுக்கு அப்பகுதியில் இயல்புநிலை திரும்பி வருகிறது.முழுமையாக அகற்றி சீரமைக்க நீண்டகால அவகாசம் தேவைப்படும்.

இதுதொடர்பாக கடந்த 13-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி, அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சுமார் 5 மணி நேரம் ஆய்வு செய்தார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்டபாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். இதுபோன்ற இடர்கள் இனி நடைபெறாமல் இருக்க நவீன தொழில்நுட்பங்களை புகுத்தவேண்டும் என்று சிபிசிஎல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x