Published : 05 Jan 2018 09:56 AM
Last Updated : 05 Jan 2018 09:56 AM

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தமிழகம் முக்கிய பங்காற்றியது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகம் முக்கிய பங்காற்றியது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு மற்றும் 75-வது ஆண்டு நிறைவு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கின் தொடக்கவிழா நேற்று நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

சுதந்திரத்துக்கு முக்கிய காரணம்

“1942-ம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். ‘செய் அல்லது செத்துமடி’ என்ற தாரக மந்திரத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய காரணமாக வெள்ளையனே வெளியேறு இயக்கம் அமைந்தது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். வன்முறை இல்லாமல் போராட்டம் நடத்திய மக்கள் மீது பிரிட்டன் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இந்தப் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. படித்தவர்கள், இளம் வயதினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆங்கில அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடினர்.

தமிழகத்தில் காமராஜர் தலைமையில் நடந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காமராஜர், சத்தியமூர்த்தி, ம.பொ.சிவஞானம், டி.பிரகாசம், வெங்கடராவ், நாகேஷ்வரா, கோமலா தேவி, வி.எம்.உபயதுல்லா, என்.அண்ணாதுரை, எம்.பக்தவட்சலம், ருக்மணி லட்சுமிபதி, பார்வதி குமாரமங்கலம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தை தமிழக மாணவர்கள் கையில் எடுத்தனர்.

கல்லூரி மாணவர்களின் பங்கு

மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா மற்றும் சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தமும் செய்யப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெயரை சென்னை ராணி மேரி கல்லூரி பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஆங்கில அரசு சஸ்பெண்ட் உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன.

உலகம் முழுவதும் பிரபலம்

கோவை, மதுரையில் மில் தொழிலாளர்களும், சென்னை துறைமுக தொழிலாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ராஜபாளையம், காரைக்குடி, தேவக்கோட்டை ஆகிய பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஆங்கிலேய அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பலர் உயிரிழந்தனர். அதன்பிறகும் போராட்டம் தொடரவே, இந்தியாவில் தங்கள் நாட்கள் எண்ணப்படுவதை பிரிட்டிஷ் அரசு உணரத் தொடங்கியது. இந்தியாவில் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது என்றார்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு உறுப்பினர் சராதினு முகர்ஜி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ப.துரைசாமி, இந்திய வரலாற்றுத் துறை தலைவர் எஸ்.எஸ்.சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x