Published : 16 Dec 2023 05:34 AM
Last Updated : 16 Dec 2023 05:34 AM

சென்னை வேளச்சேரியில் வெள்ள நிவாரணம் ரூ.6,000: முதல்வர் நாளை வழங்குகிறார்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை, சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைஅடுத்து, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ. 7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, சென்னையில் முழுமையாகவும், இதர 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். பயனாளிகள் பட்டியல் அடிப்படையில், நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் கடந்த 14-ம் தேதி மாலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் பெற்றவர்களுக்கு நாளை (டிசம்பர் 17) முதல் ரூ.6,000 நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. சென்னையில் புயல், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரியின் அஷ்டலட்சுமி நகரில் பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கி, இப்பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ரொக்கமாக வழங்க தடை இல்லை: இதற்கிடையே, நிவாரணத் தொகையை மக்களின் வங்கிகணக்கில் செலுத்த உத்தரவிட கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரிக்குமாறு சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. ‘‘வெள்ள நிவாரணம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவி. அதனால், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க இடைக்கால தடை விதித்து, அதை மேலும் தாமதப்படுத்தவோ, முடக்கவோ கூடாது. எனவே, இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது. அதேநேரம், உண்மையாகவே பாதிக்கப்பட்டுள்ள தகுதியான மக்களுக்கு நிவாரணத் தொகை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இத்தொகையை ரொக்கமாக வழங்கலாம்’’ என்று கூறி, விசாரணையை ஜன.5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x