Published : 28 Jan 2018 09:18 AM
Last Updated : 28 Jan 2018 09:18 AM

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை: காஞ்சி விஜயேந்திர சுவாமிகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன் கருத்து

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர் பான சர்ச்சை மேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருத்தத்துடன் கூடிய விளக்கம் அளிப்பதே சரியான தாக இருக்கும் என்று டிடிவி. தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டாள் பற்றி தவறான விமர்சனம் செய்தவர்களைக் கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியிருக்கும் பேச்சுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சராசரி மனிதர்களுக்கும் ஜீயர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களுக்கும் இடையேயான வித்தியாசமே வன்முறைகள் அற்ற சாத்வீகமும், கருணை உள்ளம் கொண்ட ஆன்மிகப் பணிகளும்தான்.

ஆனால், இந்த வேறுபாட்டைத் தகர்த்து, அதன்மூலம் ஆன்மிகத்துக்கே அவப்பெயர் உண்டாக்கும் விதமாக, “எங்களுக்கும் கல்லெறியத் தெரியும், சோடா பாட்டில் வீசத் தெரியும்” என்றெல்லாம் பேச்சளவுக்குக்கூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையதல்ல. அது கண்டிக்கத்தக்கதாகும்.

அதேபோல, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நின்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது அமர்ந்திருந்ததும் தமிழர்களின் உணர்வை காயப்படுத்தியதை முன்பே சுட்டிக் காட்டியிருந்தேன். ஆனால், காஞ்சி மடத் தில் இருந்து அடுத்தடுத்து வெளிவரும் கருத்துகள், எதிர்காலத் தில் இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை.

“காஞ்சி மடத்தில் கடவுளை வாழ்த்திப் பாடும்போதுகூட சுவாமிகள் எழுந்து நிற்பதில்லை” என்று மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து ஏற்கெனவே காயப்பட்டுள்ள தமிழர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாக உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த சர்ச்சை மேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால், விஜயேந்திர சுவாமிகளே வருத்தத்துடன்கூடிய ஒரு விளக்கம் அளிப்பதே சரியானதாக இருக் கும் என்று கருதுகிறேன்.

பொதுவாகவே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்த்து, ஆன்மிகத்தின் மீது பற்று கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஜீயர்கள், மடாதிபதிகள் போன்ற ஆன்மிகப் பெரியவர்களின் சொல்லும், செயலும் எதிர்காலத் தில் அமைய வேண்டும்.

இவ்வாறு டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x