Published : 04 Jan 2018 03:54 PM
Last Updated : 04 Jan 2018 03:54 PM

சாலைத் தடுப்புகளை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்று அராஜகம்; வைரலாகும் வீடியோ: இளைஞர்களை போலீஸ் தேடுகிறது

மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் சாலைத் தடுப்பை இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து, அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சமீப காலமாக இளைஞர்களிடையே குழுவாக மோட்டார் சைக்கிளில் ரேஸ் போவதும், பொதுமக்களுக்கு இடையூறாக மோட்டார் சைக்கிளை இயக்குவதும், போலீஸாருக்கு போக்கு காட்டி வாகனத்தை ஓட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது.

சாலைகளில் ஓடும் வாகனங்களை தாண்டி ரேஸ் போகும் அளவுக்கு 250 சிசி, 500 சிசி அளவிலான என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் சாலையில் ஓட்டப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள்களை இளைஞர்கள் வரம்பு மீறி ஓட்டுகின்றனர். சாலையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்லும் போது வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நள்ளிரவில் சாலையில் ரேஸ் போகும் இளைஞர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இவர்களை வளைத்துப் பிடிக்க போலீஸார் வியூகம் வகுத்து கடந்த மாதம் சாலையில் ரேஸ் ஓட்டிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் பிடித்து வழக்கு போட்டனர். புத்தாண்டு அன்று இரவு 9 மணி முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.

ஆனாலும் கடந்த புத்தாண்டு இரவு 187 விபத்துகள் நடந்தன. இந்நிலையில் நேற்று வாட்ஸப், வலைதளங்களில் ஒரு வீடியோ பிரபலமாகி வருகிறது. அதில் சாலையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் சாலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே சாலையில் இழுத்துச் செல்கின்றனர்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராஜ்பபவன் படேல் சாலை இரண்டு இடங்களில் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர்கள் அனைவரும் இளைஞர்கள். வீடியோ விவகாரம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அவர்களை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உயர்ரக என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளிகளில் பின் பக்க நம்பர் பிளேட்டுகள் பெரும்பாலும் இருப்பதில்லை. மேலும் செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பின் பக்கம் நம்பர் பிளேட் வைத்துக்கொள்வதில்லை. இதை போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x