Published : 12 Jan 2018 09:43 AM
Last Updated : 12 Jan 2018 09:43 AM

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பெற்றது என்ன? - அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதிமுக அரசு பெற்றது என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்து அவர் பேசியதாவது:

மக்களாட்சியின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கும் என தான் நம்புவதாக ஆளுநர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களாட்சி மீதான நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் ஆளுநரும் செயல்படுவார் என நம்புகிறேன்.

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கைகளை பறைசாற்றும் சாசனமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆளுநர் உரையில் அப்படிப்பட்ட எந்த அம்சங்களும் இல்லை. பல இடங்களில் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணக்கமாக நடந்து கொண்டதன் மூலம் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைத்தால் வரவேற்கலாம். ஆனால், கிடைக்க வேண்டிய நன்மைகள்கூட தமிழகத்துக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அப்படி ஏதாவது நன்மைகள் கிடைத்ததா என்பதை அறிய விரும்புகிறேன்.

கடந்த 2015 பெருமழை வெள்ளம், 2016 வார்தா புயல், வறட்சி, தற்போது ஒக்கி புயல் என இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய தமிழக அரசு பல ஆயிரம் கோடிகளை நிவாரணமாகக் கேட்டது. பிரதமரிடம் நேரிலும் மனு கொடுத்தீர்கள். ஆனால், கிடைத்ததோ மிகச்சொற்பமே. அப்படியிருக்கும்போது மத்திய அரசை பாராட்டுவது உங்கள் நலனுக்காகவே என எண்ண வேண்டியுள்ளது.

‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்கள், கெயில் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இல்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 98 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் எதுவும் செயல்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தின் நிதி நிலைமை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதே உரையில் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக வும் கூறியிருப்பது முரணாக உள்ளது.

மொத்தத்தில் ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை பறைசாற்றாத, குறிக்கோள்கள் இல்லாத வெற்று உரையாக உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘‘மத்தியில் சுமார் 14 ஆண்டுகள் திமுக அதிகாரத்தில் இருந்தது. அப்போது தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள். அதிகாரத்தில் இருந்தபோதே உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது எங்களுக்கு அதிகாரம் இல்லை.

எனவே, மத்திய அரசிடம் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும். தமிழகத்துக்கான நிதியைப் பெற மத்திய அரசிடம் போராடி வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x