Last Updated : 12 Jan, 2018 02:29 PM

 

Published : 12 Jan 2018 02:29 PM
Last Updated : 12 Jan 2018 02:29 PM

புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு பிப். 15ல் விமான சேவை தொடக்கம்

 

ஐதராபாத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து வரும் பிப்ரவரி 15 முதல் பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை தொடங்குகிறது. அதிக வரவேற்பு இருப்பதால் இச்சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் லாஸ்பேட்டை யில் விமானநிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது.

புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி 17-ம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயங்கின. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏது மின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்ட, உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், புதுச்சேரி-ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மூலம் விமானப் போக்குவரத்து சேவை, புதுச்சேரி அரசு முயற்சியால் மத்திய அரசு அனுமதியுடன் தொடங்கப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் கடந்த ஆகஸ்ட் 15 முதல் இயக்கப்படுகிறது.

விமான சேவைக்கு வரவேற்பு இருப்பதால் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது:

அதிக வரவேற்பு இருப்பதால் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் பிப்ரவரி 15ம் தேதியிலிருந்து கூடுதல் விமான சேவையை தொடக்குகிறது. பெங்களூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு காலை 10.30க்குவந்தடையும். அதைத்தொடர்ந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 12.10க்கு பெங்களூரூ சென்றடையும். கட்டணம் ரூ. 1600 என நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x