Last Updated : 12 Dec, 2023 02:55 AM

 

Published : 12 Dec 2023 02:55 AM
Last Updated : 12 Dec 2023 02:55 AM

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வள்ளலார் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

வேலூர் வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ளகுடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின்கீழ்ப்பகுதியில் குவிந்துள்ளகாலி மதுபாட்டில்கள், குப்பைக்கழிவுகள்.

வேலூர்: வேலூர் வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி பாதியில் நின்றதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில், சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி சார்பில் பெரிய அளவிலான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டியையொட்டி ஆவின் பாலகம், பங்க் கடை, சிற்றுண்டி கடை (டிபன் சென்டர்) உள்ளன.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதாலும், இரவு நேரங்களில் சிற்றுண்டி கடை திறக்கப்படாததால் பல்வேறு பகுதியில் இருந்து வரும் மதுப்பிரியர்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே அமர்ந்து சாவகாசமாக மது அருந்துக்கின்றனர். பிறகு, காலி பாட்டில்களையும், இறைச்சிக்கழிவுகளை குடிநீர் தொட்டிக்கு கீழே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மதுப்பிரியர்கள் செய்யும் அட்டூழியம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘வள்ளலார் பிரதான பகுதியாக ‘ஹரி ஓம் நகர்’ உள்ளது. இங்குள்ள 2-வது தெருவின் முகப்பில் மாநகராட்சியின் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து தான் பேஸ் 3 முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீரை தொட்டியை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆவின் பால் பூத் என்ற பெயரில் தேநீர் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தேநீர் குடித்துவிட்டு காலி பிளாஸ்டிக் கப், பேப்பர் கப்களை தண்ணீர் தொட்டிக்கு கீழே வீசிவிட்டு செல்கின்றனர். அதை அப்புறப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. போதாக்குறைக்கு அருகாமையில் சிற்றுண்டி கடை ஒன்றும் உள்ளது. இந்த கடையில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக்கழிவுகள் குடிநீர் தொட்டிக்கு அருகாமையில் கொட்டப்படுவதால் மாடுகள் மற்றும் பன்றிகள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்துவிட்டன.

இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இரவு நேரங்களில் எங்கெங்கிருந்தோ வரும்மதுப்பிரியர்கள் இருள் சூழ்ந்த குடிநீர் தொட்டிக்கு கீழே அமர்ந்து மது அருந்து கின்றனர். இந்த வழியாக பேஸ் 3 மற்றும் பேஸ் 4-க்கு பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள், முதியவர்கள் அவ் வழியாக வரவே அச்சப்படுகின்றனர். இது குறித்து மாநகராட்சி மண்டல அலுவலகம், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வேலூர் வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகள்.

இதற்கிடையே, குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. என்ன காரணம் என்றே தெரியவில்லை. இது வரை சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாக வள்ளலார் பேருந்து நிறுத்தம் அருகேஉள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மாறிவிட்டது. இப்பகுதியைச் சுற்றிலும் 100-க்கணக்கான வீடுகளும், வணிக நிறுவனங்களும் உள்ளதால் சுகாதார சீர்கேட்டில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்..

எனவே, இங்குள்ள குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும். குடிநீர் தொட்டியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்ற வேண்டும். பாதியில் நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர்அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மீட்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது’’ என்றனர். இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொதுஇடங்களில் மது அருந்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் குடிநீர் தொட்டி அருகே ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும். சட்ட விதிகளை மீறினால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x