Published : 12 Dec 2023 05:06 AM
Last Updated : 12 Dec 2023 05:06 AM

புதிய வாக்காளருக்கு மார்ச்சில் வாக்காளர் அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக். 27-ம் தேதி தொடங்கி, டிச. 9-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன.5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள், புதிய வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

அக். 27-ம் தேதி முதல் டிச. 9-ம் தேதி வரையில் பெயர் சேர்த்தல்,நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்படும். தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு வரும் மார்ச் மாதம் வழங்கப்படும். இதுதவிர, ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டை பெற, ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

தற்போதைய புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வாக்குப்பதிவு குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கல்லூரிகள், பள்ளிகளை தொடர்பு கொண்டு மாணவர்கள் மத்தியில் கட்டுரைப் போட்டி, போஸ்டர் தயாரித்தல் போட்டிகள் நடத்துகின்றனர்.

இதில் போஸ்டர் தயாரிக்கும் போட்டி முடிந்துவிட்டது. கட்டுரைப் போட்டிகள் அடுத்த 10 தினங்களில் தொடங்க உள்ளது. ‘இன்லேண்ட்லெட்டரில்’ நாங்கள் வழங்கியுள்ளதேர்தல் தொடர்பான 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அது குறித்து கட்டுரை எழுதி,மாவட்ட தேர்தல் அதிகாரிக்குஅனுப்ப வேண்டும்.

இதுதவிர, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரின் அலுவலகங்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகங்களில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, தேசிய வாக்காளர் தின நிகழ்வுக்குப் பிறகு, வாக்குச்சாவடிகள்தோறும் வாகனத்தில் மின்னணு இயந்திரங்களை கொண்டு சென்று, அங்கு மக்களுக்கு வாக்களிப்பது எப்படி என்பதை செய்முறை விளக்கம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் ஒன்றாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை மாநில அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x