Published : 11 Dec 2023 03:47 PM
Last Updated : 11 Dec 2023 03:47 PM

அன்று நடந்தது என்ன? - அட்டைப் பெட்டியில் ஒப்படைக்கப்பட்ட இறந்த குழந்தையின் தந்தை விவரிப்பு

குழந்தையின் உடல் இருந்த அட்டைப் பெட்டியுடன் மசூத் | கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

சென்னை: குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஒப்படைத்த சம்பவத்தில் நடந்தவற்றை அக்குழந்தையின் தந்தை மசூத் விவரித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை முறையாக துணி சுற்றாமல், அட்டைப் பெட்டிக்குள் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தையும், கண்டனங்களையும் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், அக்குழந்தையின் தந்தை மசூத் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "டிசம்பர் 6-ம் தேதியன்று காலையில் ஒரு 11 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த வலி அவ்வப்போது வந்துவந்து போனதால், சரியாகி விடும் என்று நினைத்தோம். ஆனால், வலி அதிகமாக இருந்ததால், ஆம்புலன்ஸுக்கு போன் செய்தோம். ஆனால், அன்று போன் போகவில்லை. அதுமட்டுமின்றி, வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியிருந்ததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவர்கள் மீதும் குறை சொல்ல முடியாது. காரணம், போன் போகவில்லை, கரன்ட் இல்லை, நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போன் செய்ய முயற்சித்தும், எதுவும் நடக்கவில்லை. உடனே நான் வீட்டைவிட்டு வெளியே சென்று வாகனங்கள் ஏதாவது கிடைக்குமா என்று பாரத்து வந்தேன். அப்போது என் கழுத்து வரை தண்ணீர் இருந்தது. எனது மனைவியையும் அழைத்துச் சென்றிருக்க முடியாது, அவ்வளவு தண்ணீர் கிடந்தது. பின்னர், வீடு திரும்பியபோது வீட்டில் ஒரே பெண்கள் கூட்டம். குழந்தை இறந்து பிறந்துவிட்டதாகவும், என்னை உள்ளே செல்ல வேண்டாம் என்றும் கூறினா். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸை அழைக்க முயற்சித்தனர். ஆனாலும், அவர்களை போன் வேலை செய்யாததால் தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே, எனது மனைவியை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொண்டு வந்தோம்.

தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், மீன்பாடி வண்டியில் வைத்துக்கொண்டு ஜி-3 மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அது மூடியிருந்தது. எனவே, அருகில் இருந்த முத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு, பெண் காவலர் ஒருவரிடம் உதவி கோரினேன். அந்தக் காவலர் சொல்லி, எனது மனைவியை அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது அவர்கள், குழந்தையை சுத்தப்படுத்தி கொடுத்தனர். | முழுமையாக வாசிக்க > குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் ஒப்படைத்த சம்பவம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அதிர்ச்சியும் பின்னணியும் |

மேலும், எனது மனைவியின் வயிற்றில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினா். ஆனால், மின்சாரம் இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அந்தப் பெண் காவல் அதிகாரி அனுப்பி வைத்தார். அதேபோல், குழந்தையை அட்டைப் பெட்டியில்தான் தர வேண்டும். காரணம், இறந்து பிறந்த குழந்தை என்பதால், தூக்க முடியாது. அதேபோல், குழந்தையை துணியில் சுற்றித் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தரவில்லை.

அதேபோல், வெளியாள் ஒருவர் 2500 ரூபாய் கொடுத்தால், குழந்தையை துணியில் சுற்றித் தருவதாக கூறினார். மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் யாரும் என்னிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறவில்லை. மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த ஒருவர்தான் 2500 ரூபாய் கொடுத்தால், வேலை நடக்கும் என்று கூறினார். நான் அவரை இந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர் என்று நினைத்துதான் இந்த விசயத்தை கூறினேன். அந்த நபர் வெளியாள் என்று தெரிந்திருந்தால், இதுகுறித்து நான் கூறியிருக்கவே மாட்டேன். மற்றபடி மருத்துவமனை பணியாளர் மீது தவறு எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x