Published : 16 Jan 2018 12:34 PM
Last Updated : 16 Jan 2018 12:34 PM

ராமநாதபுரம் அருகே கடல் தாய்க்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்திய மீனவர்கள்: பாய்மரப் படகில் பூஜை பொருட்களுடன் வழிபாடு

ராமநாதபுரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைக் கொண்டு பொங்கல் வைக்கச் செய்து, தங்களுக்கு மீன் செல்வத்தை வாரி வழங்கும் கடல் தாயை மீனவர்கள் வழிபடுகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டு ஊர் கூட்டத்தில் 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஜெயஸ்ரீ, சானியாமிர்ஸா, சமயகிருத்திகா, அஜேதா, ஹரிணி, சமயராகவி, நிதி ஆகிய 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட சிறுமிகள் ஸ்ரீரணபத்திர காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பெற்றோர் உதவியுடன் பொங்கல் வைத்தனர்.

பின்னர் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரகச் செம்புகளோடு, ஏழு வாழை இலைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து தென்னம்பாளையில் செய்யப்பட்ட சிறிய பாய்மரப் படகில் பூஜை பொருட்களோடு இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றி திரியிட்டு விளக்கு ஏற்றப்பட்டு கிராமத் தலைவர் வெள்ளிக்கருப்பிடம் கொடுக்கப்பட்டது.

சிறிய பாய்மரப் படகை கிராமத் தலைவர் தூக்கிவர சப்த கன்னியர்களாக தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமிகளும் கரகச் செம்பை தலையில் ஏந்தி பின் செல்ல மேளதாளத்துடன் கடலில் கழுத்தளவு தண்ணீர் உள்ள இடத்துக்குச் சென்று பாய்மரப் படகை விட்டுவிட்டு, கரகச் செம்பில் உள்ள மஞ்சள் கலந்த பாலை கடலில் கொட்டி வழிபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கிராமத் தலைவர் வெள்ளிக்கருப்பு கூறியதாவது,

பாய்மரக் படகு கடலில் காற்று அடிக்கும் திசையில் அடித்து ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும். படகில் உள்ள பூஜைப் பொருட்களை கடல் தாயிடம் கொண்டு சேர்ப்பதாக, நாங்கள் நம்புகிறோம்.

இதனை தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து செய்து வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்புவரை பூஜை பொருட்களோடு ஒருகிராம் தங்கமும் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போது அது இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x