Published : 17 Jan 2018 09:48 AM
Last Updated : 17 Jan 2018 09:48 AM

கிணற்றில் விழுந்த யானைக் குட்டி மீட்பு

ராயக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்து தவித்த 3 மாத யானைக் குட்டியை வனத்துறையினர் மீட்டு வனத்தில் விடுவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஊடேதுர்க்கம் காப்புக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு சுமார் 30 யானைகள் கூட்டமாக ஊடேதுர்க்கம் பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறின.

ராயக்கோட்டை அடுத்துள்ள திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பாவாடரப்பட்டி பகுதியில், சுமார் 3 மாதமே ஆன குட்டி யானை ஒன்று நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்தது. சுமார் 30 அடி ஆழம் கொண்ட, வறண்டு கிடந்த இந்த கிணற்றில் விழுந்த யானைக் குட்டி மேலேறி வர முடியாததால் ஓசையெழுப்பியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வலை மூலம் யானைக் குட்டியை மேலேற்றுவது என முடிவு செய்த வனத்துறையினர் தேவையான பொருட்களுடன் கிணற்றில் இறங்கினர். கிணற்றுக்குள் மிரட்சியுடன் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வலையில் ஏற்றிய பின்னர் மேலிருந்தவர்கள் வலையை இழுத்தனர். இதன்மூலம் யானைக் குட்டி பத்திரமாக மேலேற்றப்பட்டது.

அதிகாலை முதல் கிணற்றுக்குள் தவித்த யானைக் குட்டி பகல் 11 மணியளவில் மீட்கப்பட்டது. யானைக் குட்டியை வனத்துறையினர் மெதுவாக வனத்ததுக்குள் அழைத்துச் சென்றனர். குறிப்பிட்ட தூரம் வரை சென்றவுடன் யானைக் குட்டியின் சத்தம் கேட்டு வனத்தில் இருந்த யானைகள் வெளிவந்து குட்டியை கூட்டத்துடன் இணைத்து அழைத்துச் சென்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x