Published : 19 Jan 2018 07:35 AM
Last Updated : 19 Jan 2018 07:35 AM

அரசியலமைப்பு அமர்வுக்கு காவிரி வழக்கை மாற்ற வேண்டும்: காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

காவிரி வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைத்து, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தி உள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. நிர்வாகிகள் த.மணிமொழியன், அய்யனாபுரம் சி.முருகேசன், பொறியாளர்கள் கோ.திருநாவுக்கரசு, எஸ்.பழனிராஜன் மற்றும் ஜெய்னுல் ஆபிதீன், முகமது அசாருதீன், பழ.ராஜேந்திரன், நா.வைகறை, கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் நடந்துவரும் காவிரி வழக்கின் தீர்ப்பு சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி வழக்கில் சாதகமான நிலை வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழக அரசும், காவிரி வழக்கில் உரிய கவனம் செலுத்தி, திறனோடு தர்க்கங்களை முன்வைக்கவில்லை என்பதும், ஒரு கட்டத்தில் மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்ததும் அனைவரும் அறிந்தது.

எனவே, காவிரி வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைத்துவிட்டு, முல்லை பெரியாறு அணை வழக்கில் செய்ததுபோல, இந்த வழக்கையும் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம். இதற்கான, மனுவையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழ்நாடு அரசும், இந்தக் கோரிக்கையை பரிசீலித்து, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்ய வேண்டும்.

டெல்டாவில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் 12 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியை காப்பாற்ற தமிழக முதல்வர் டெல்லி சென்று, பிரதமரைச் சந்தித்து, கர்நாடக அரசு அவசர கால உயிர்த் தண்ணீராக 15 டிஎம்சி தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x