Published : 25 Jan 2018 10:38 AM
Last Updated : 25 Jan 2018 10:38 AM

சம்பந்தமே இல்லாமல் என் குடும்பத்தையும் மது சீரழித்துவிட்டது: கொலையில் கணவரை இழந்து நிராதரவாய் தவிக்கும் மூதாட்டி

மது, அருந்துபவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தையும் பாதிக்கும். ஆனால், கோவையில் ஒருவரது குடிப்பழக்கம், முன்பின் தொடர்பே இல்லாத மற்றொருவரின் உயிரைப் பறித்துள்ளது. கணவனை இழந்து மூதாட்டி ஒருவர் நிராதரவாய் விடப்பட்டுள்ளார்.

கோவை பூமார்க்கெட் ஜெயக்குமார் வீதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (68). மதுரை மாவட்டம் எழுமலைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பாக்கியம் (67), ஐந்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கோவையில் குடியேறினார். தொடக்கத்தில் கூலித் தொழிலுக்கு சென்று கொண்டிருந்தவர், 4 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அதில் இருவர் மாற்றுத்திறனாளிகள். ஒரு மகன் இறந்து விட்டார். மற்ற இருவரோ தாய், தந்தையை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து தங்களது குடும்பத்துடன் சென்றுவிட்டனர். மாற்றுத்திறனாளி மகன், மகளின் குடும்பங்கள் மட்டுமே இந்த வயதான தம்பதிக்கு ஆதரவாக இருந்தது.

கடந்த 7-ம் தேதி இரவு ஆர்.எஸ்.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவல் பணிக்கு பொன்ராஜ் புறப்பட்டார். இரவு 9 மணியளவில் காவல் பணியில் இருந்த இடத்துக்குச் சென்று கணவருக்கு உணவு பரிமாறினார். வீட்டுக்குப் புறப்படலாம் என நினைத்தபோது, திடீரென ஒரு நபர் அங்கு வந்தார். எந்த அனுமதியும் கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் பொன்ராஜ் அவரைத் தடுத்தார். அங்கு பிரச்சினை எழுந்தது.. தடுக்கச் சென்ற பாக்கியத்துக்கு பலத்த அடி. சுதாரித்து எழுவதற்குள் மயங்கி சரிந்தார் பொன்ராஜ். விபரீதத்தை உணர்ந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். கணவரை எழுப்ப முயன்ற பாக்கியத்தின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சிறிது நேரத்தில் அவரது மூச்சும் அடங்கிப் போனது. மூதாட்டியின் அழுகுரல் கேட்டு கூடிய மக்கள், போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸாரும் வந்து பொன்ராஜின் பிரேதத்தை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, புகார் அடிப்படையில் வழக்கு பதிந்து, கண்ணதாசன் என்பவரை கைது செய்தனர். கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் மேலே மது அருந்தச் சென்றபோது காவலாளி பொன்ராஜ் தடுத்ததால், அவரை கண்ணதாசன் கொலை செய்ததாக போலீஸார் கூறினர்.

இந்த கொலையை சம்பவமாக மட்டுமே பார்த்தால், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார், வழக்கும் நீதி விசாரணைக்கு வந்துவிட்டது. விரைவில் முடிவு தெரிந்துவிடும். ஆனால், எந்த முன் பகையும் இல்லாமல் கண் முன்னே கணவரை இழந்து தற்போது ஆதரவில்லாமல் தவித்து வருகிறார் மூதாட்டி பாக்கியம்.

அவர் கூறும்போது, ‘5 குழந்தைகள் இருந்தாலும் இரண்டு பேர் தான் என்னுடன் இருக்கிறார்கள். இருவருமே மாற்றுத்திறனாளிகள். நான் மட்டுமல்ல, என் பிள்ளைகளின் குடும்பங்களும் என் கணவரை நம்பியே இருந்தது. அவர் சம்பாதிக்கும் ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் தான் சிக்கனமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தோம். எதிர்பாராதவிதமாக என் கண் முன்னே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இப்போது வாழ்வாதாரம் இழந்து நிற்கிறேன்.

அதேசமயம், மது அருந்த விடவில்லை என்பதால் கொலை செய்யவும் அந்த இளைஞர் துணிந்தார். மது அவரை மட்டும் பாதிக்கவில்லை. அவரோடு எந்த தொடர்பும் இல்லாத என் குடும்பத்தையும் பாதித்திருக்கிறது. அரசு சார்பில் ஏதாவது உதவி கிடைத்தால் என்னால் பிழைத்துக் கொள்ள முடியும்’ என்கிறார் பெரும் மனக்குமுறலோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x