Published : 28 Jan 2018 09:11 AM
Last Updated : 28 Jan 2018 09:11 AM

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் தேர்தல் வேண்டும்: மாணவர் காங். தலைவர் வலியுறுத்தல்

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் தேர்தலை கட்டாயமாக்க வேண்டும் என்று அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் பெரோஸ்கான் தெரிவித்தார்.

அகில இந்திய மாணவர் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழக மாணவர் காங்கிரஸுக்கான உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் பெரோஸ்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பேச்சு சுதந்திரம் பறிப்பு

உறுப்பினர் சேர்க்கையைth தொடங்கி வைத்த பெரோஸ்கான் நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அவர்களுக்கான உரிமைகள் முறையாக வழங்கப்படுவது இல்லை. இவற்றை எதிர்த்து அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மாணவர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காகவும் சமூக நலன் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் மாணவர் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும். அதற்கு அடித்தளமாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் தேர்தல்கள் நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.

இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள நம்முடைய நாட்டில் இளம் தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு வழிவகை செய்ய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 25 ஆகக் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வலுவான மாணவர் காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறும்போது, “தமிழக மாணவர் காங்கிரஸின் தற்போதைய நிலை வருத்தம் அளிக்கும் விதத்தில் இருக்கிறது. எனவே, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கடினமாக உழைத்து காமராஜர் காலத்தில் இருந்ததை போன்று வலுவான மாணவர் காங்கிரஸை மீண்டும் உருவாக்கப் பாடுபட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x