வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 - தமிழக அரசின் அறிவிப்புகள் | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.9, 2023

வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 - தமிழக அரசின் அறிவிப்புகள் | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.9, 2023
Updated on
2 min read

ரூ.6,000 நிவாரண நிதி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பயிர் சேதங்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு: மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, அதாவது 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 ஆயிரம் வழங்கப்படும் என்றும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 ஆகவும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கால்நடைகளின் உயிரிழப்புக்கு இழப்பீடு: மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கிடவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களுக்கு இழப்பீடு - தமிழக அரசு அறிவிப்பு: மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.50,000, பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.15,000, முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு அதிகபட்ச மானியத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு அதிகபட்ச மானியத் தொகை ரூ.7.50 லட்சம் வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு நிவாரணத் தொகை ரூ.15,000 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வெள்ளம் - ‘குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம்’: மழை, வெள்ளம் பாதித்த பகுதிகள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி: மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலையை அசோக் லேலண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சனிக்கிழமை வழங்கினார். மேலும், பி.எஸ்.ஜி. குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி லிமிட்டட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலை முதல்வரிடம் வழங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழங்கினார்.

முன்னதாக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியை, முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் வழங்கினார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் மின் நுகர்வோர்களுக்கும் கால நீட்டிப்பு: மிக்ஜாம் புயல், கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” - அன்புமணி: தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடை 50 சதவீதத்துக்கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால், அதற்கு திமுகவும், அதிமுகவும்தான் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

“ஹமாஸுக்கு எதிரான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை”: காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி விளக்கமளித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆவணமொன்றில் அமைச்சர் மீனாட்சி லேகியை இணைத்து வெளியான கேள்வி ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவியது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் லேகி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

கர்நாடகா, மகாராஷ்டிராவில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை: கர்நாடகா, மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சனிக்கிழமை அதிகாலையிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். 44 இடங்களில் நடந்த இந்தச் சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் கோட்பாடுகளை இந்தியாவில் பரப்ப முயற்சித்துள்ளனர் என்று என்ஐஏ குற்றஞ்சாட்டியிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in