Published : 09 Dec 2023 01:15 PM
Last Updated : 09 Dec 2023 01:15 PM
சென்னை: மழை, வெள்ளம் பாதித்த பகுதிகள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து இன்று ஆய்வு செய்தார். பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: தமிழ்நாடு முழுவதிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் 3000 இடங்களில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் சென்னையில் 500 இடங்களில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 679 இடங்களில் கூடுதலாக நடைபெற்று வருகிறது. மேலும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் இன்று தொடங்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் 3000 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டு தற்போது கூடுதல் இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகப்படியான மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சென்னை மாவட்டத்தில் 679 இடங்களிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 இடங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் 2000 என்கின்ற வகையில் மொத்தம் 3000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ முகாம்கள் மழைக்கால நோய்கள் என்று சொல்லப்படுகின்ற மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, டயாரியா, சேற்றுப்புண், தொண்டை வலி, இருமல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரத்தில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களை அனுப்பப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 160 நடமாடும் மருத்துவ வாகனங்களில் மருத்துவக்குழுவினர் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் 50 வாகனங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 60 வாகனங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 வாகனங்கள் என்று 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவக்குழுவினர் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். அந்தவகையில் 06.12.2023 முதல் 08.12.2023 ஆகிய 3 நாட்களில் 2149 முகாம்கள் நடமாடும் மருத்துவக்குழுக்களின் வாயிலாக நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த முகாம்களின் மூலம் 1,69,421 பேர் பயன்பெற்று இருக்கின்றனர். இந்த பயனாளர்களில் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் 867 பேர், இதில் இருமல் மற்றும் சளி தொல்லை பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 13,372 பேர், இவர்கள் அனைவருக்கும் தற்போது மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம்கள் மழை பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தொடர்ச்சியாக தேவைக்கேற்ப நடத்தப்படும். இதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் 29.11.2023 முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 6 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 7வது வாரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 6 வாரங்களில் நடத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 13,234. இந்த மருத்துவ முகாம்கள் மூலமாக 6,50,585 பேர் பயனடைந்து இருக்கின்றனர். இன்னும் 3 வாரங்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
மழைக்கால நோய்கள் - வழிகாட்டு நெறிமுறைகள்: நேற்று புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மழைக்கால நோய்கள் பாதிக்காத வகையில் எந்தமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில் காய்ச்சிய குடிநீர் மட்டுமே எடுத்துக் கொள்ளுதல், பிளிச்சிங் பவுடர் வீட்டு வாசல்களில் தெளித்துக் கொள்வது இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு 1913 என்கின்ற எண்ணிலும் அல்லது தமிழ்நாடு அவசர தொடர்பு எண் 104 என்கின்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அவர்களுடைய பகுதிகளில் உள்ள சுகாதாரம் தொடர்பான நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று குடிநீரின் குளோரின் அளவை உறுதிப்படுத்திக் கொள்ளுதல், அருகில் உள்ள மெட்ரோ குடிநீர் அலுவகத்தின் மூலம் குளோரின் எந்த அளவிற்கு உள்ளது என்று ஆய்வு செய்து குடிநீர் அருந்துவது என்பது அவசியம். இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வெளியிடப்பட்டிருந்தது. அதோடுமட்டுமல்லாமல் மழை வெள்ளம் பாதித்த பகுதிகள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
புயல் நிவாரணப் பொருட்கள் வழங்குதல்: கடந்த இரண்டு நாட்களாக சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அடையார் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பகுதி பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளான பால், ரொட்டி, பிஸ்கட், அரிசி, போர்வை போன்ற பொருட்களை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம். குறிப்பாக ஜோகி தோட்டம், நெருப்பு மேடு, ஜோதியம்மாள் நகர் , விநாயகபுரம், அன்னை சத்தியா நகர், சின்னமலை ஆரோக்கிய மாதா குடிசை பகுதிகள், கோட்டூர்புரம், சித்திராநகர், வாம்பே குடியிருப்பு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் தரப்பட்டது.
இன்று (09.12.2023) காலை கோதோமேடு, திடீர் நகர், சலவையாளர் காலனி, அண்ணாநகர், போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள 2000 குடும்பங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாமியார் தோட்டம், அபித் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 2000 குடும்பங்களுக்கு இன்று பிற்பகலில் தரப்படவுள்ளது. அதன் பிறகு அருளாயம்பேட்டை, நாகிரெட்டி தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு தரப்படவுள்ளது. தொடர்ந்து நாளையும் 10,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் தரப்படவுள்ளது. இவையனைத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும், அதன் அமைப்புகளின் சார்பிலும் தரப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக சைதாப்பேட்டையில் 72,000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் மட்டும் 40,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மழை தடுப்பு பணிகள் – நிவாரணப்பணிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எந்த இடங்களிலும் பொதுமக்கள் கோவமாக எங்களிடம் பேசுவதில்லை, ஆனால் ஒரு சில இடங்களில் எதிர்கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு கட்சியை சேர்ந்தவர்களே பொதுமக்களை எங்களிடம் கோவமாக வாக்குவாதம் செய்யச் சொல்லி வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிவு செய்கின்றனர், அது பற்றியெல்லாம் நாங்கள் கவலைகொள்ளவில்லை, தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவிகளை செய்யவே விரும்புகின்றோம். நான் ஒருமாத காலத்திற்கு முன்னர் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து பேசி 20 செ.மீ மழைவந்தாலும் எங்கும் தண்ணீர் தேங்காது என்று கூறியிருந்தேன், அதனை தற்போது சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்து விமர்சித்து வருகின்றனர். நான் குறிப்பிட்ட பிறகு 3 நாட்களில் 18 செ.மீ மழை வந்தது, அதுவரை தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. ஆனால் டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் மட்டும் 145 ஆண்டிற்கு முன்னர் பெய்த பெருமழையினை போன்று மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
வானிலை ஆராய்ச்சி துறையின் இயக்குநர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 5 செ.மீ என்பது இயல்பான மழையளவு என்றும், ஆனால் தற்போது பெய்துள்ள மழையின் அளவை பார்த்தோமேயானால் நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ, மீனம்பாக்கத்தில் 50 செ.மீ பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இயல்பான அளவினை காட்டிலும் இந்தாண்டு 12 மடங்கு கூடுதலாக பெய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பெய்த மழையினை காட்டிலும் தற்போது 2 மடங்கு அதிகமான மழை பெய்துள்ளது. எனவே விமர்சனங்கள் செய்வதற்கு முன்னாள் தமிழ்நாடு அரசு மேற்கெள்ளும் பணிகளை கொஞ்சம் மனசாட்சியோடு எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும், இரவு பகல் பாராமல் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களின் மனசு புண்படாதபடியும் பேச வேண்டும்.
புயல் மையம் கொண்டிருந்த நேரத்தில் செய்தியாளர்களுக்கு அடையார் ஆற்றங்கரை முகத்துவாரத்தை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டது, அங்கு கடல் நீர் மழைநீர் உள்வாங்கவில்லை என்பது கண்கூடாக பார்வையிடப்பட்டது. ஆனால் அப்போது ஒரேயொரு செய்தி அலைவரிசை சார்ந்தவர் மட்டுமே வந்தார். புயலின் காரணமாக பெரும்பாலான செய்தியாளர்கள் வரவில்லையென்றாலும் நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பெருமழையினை அரசியல் செய்ய வேண்டாம், அப்படி அரசியல் செய்தாலும், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும், சீமானாக இருந்தாலும் அல்லது மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் நாங்கள் எதிர் எதிரே அமர்ந்து விவாதிக்க தயாராகவே உள்ளோம், மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேரிலே அழைத்துச் சென்று காட்ட தயாராகவே உள்ளாம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT