Published : 09 Dec 2023 11:32 AM
Last Updated : 09 Dec 2023 11:32 AM

கனமழை உயிரிழப்பு முதல் கொசஸ்தலை பாதிப்பு வரை: டாப் 10 அப்டேட்ஸ் @ சென்னை வெள்ளம்

இதுவரை 16 பேர் உயிரிழப்பு: சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சில நாட்கள் தவித்தனர். கனமழைக்கு சென்னை வருவாய் மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வேளச்சேரியில் பள்ளத்தில் விழுந்த கன்டெய்னரில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. | விரிவாக வாசிக்க > சென்னையில் 43 இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை: கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு

மின் வாரிய ஊழியர்களுக்கு சவாலான பணி: நீர்நிலைப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் ஏறி சீரமைக்கும் பணியை மேற்கொள்வது மின்வாரிய ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுவே சில இடங்களில் மின் விநியோகம் சீராகாமல் இருப்பதற்குக் காரணம் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். | விரிவாக வாசிக்க > நீர்நிலைகளில் உள்ள மின்கம்பங்களை சீரமைப்பது மின் வாரிய ஊழியர்களுக்கு சவாலான பணி: மின் தடைக்கு இதுவே காரணம் என தகவல்

4 நாட்களாகியும் வடியாத மழைநீர்: மிக்ஜாம் புயல் காரணமாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4-ம் தேதி மழை கொட்டியது. இதனால், பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம்- அம்மன் நகர், சி.டி நகர், கோவிந்தராஜ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் காட்டுப்பாக்கம்- அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நீரை அகற்றும் பணி, மின் மோட்டார்கள், டீசல் மோட்டார்கள் என 25 மோட்டார்கள் மற்றும் 6 டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. | விரிவாக வாசிக்க >மழை நின்று 4 நாட்களாகியும் காட்டுப்பாக்கம் பகுதிகளில் வடியாத மழைநீர்

வெள்ளத்தால் பாழான ரேஷன் கடைப் பொருள்கள்: சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பாழாகின. அக்கடைகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகனமழையால் சென்னை மற்றும்அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மாநகரில் உள்ள பல ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்தது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள 1,318 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,113 கடைகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 834 கடைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 641 கடைகள் ஆகியவற்றை, விடுமுறை நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. | விரிவாக வாசிக்க > கனமழை காரணமாக வெள்ளநீர் புகுந்ததால் ரேஷன் கடைகளில் பாழான பொருட்கள்: சேதத்தை மதிப்பிடும் பணி தீவிரம்

சென்னையில் 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியத்தின் இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 7-ம் தேதிமட்டும் 42 நீர் நிரப்பும் நிலையங்களில் இருந்து 444 லாரிகள் மூலம் 4,227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியகுடியிருப்பு மக்கள், 74 நிவாரண முகாம்கள் மற்றும் அங்கு தங்கியுள்ளவர்கள், உணவு தயாரிக்கும் கூடங்களுக்கு லாரிகள் மூலம் நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 263 இடங்களில்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > சென்னையில் ஒரே நாளில் 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவால் மீனவர்கள் பாதிப்பு: சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேறிய எண்ணெய் கசிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயலால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மணலி புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு மிதந்து வருகிறது. இது அப்பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளில் கரிய பிசின் போன்று ஒட்டிக் கொண்டது. மேலும்,குடியிருப்புகளின் சுவர்களில் கரிய எண்ணெய் படிவும் ஏற்பட்டது. | விரிவாக வாசிக்க > கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவால் மீனவர்கள் பாதிப்பு: தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு

சென்னை மேயரை பொதுமக்கள் முற்றுகை: அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தக் கோரி சென்னை மேயர் பிரியாவை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் சுற்றுப் புறமாவட்டங்களில் தாழ்வான பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மழை நின்ற பிறகும் நீர் அகற்றப்படாததால் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், மீட்பு பணிக்காக செல்லும் மக்கள் பிரதிநிதிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மீட்புபணியை விரைவுபடுத்தாதது ஏன் என்ற கேள்வியையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் அவர்கள் முன்வைக்கின்றனர். | விரிவாக வாசிக்க > அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சென்னை மேயரை பொதுமக்கள் முற்றுகை

ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதம்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் சம்பா பருவத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை, மிக் ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை கொட்டித் தீர்த்தது. | விரிவாக வாசிக்க > திருவள்ளூர் | ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதம்: நிவாரணம் கோரும் விவசாயிகள்

18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் 10, 11-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 12, 13, 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. | விரிவாக வாசிக்க > நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x