Last Updated : 08 Dec, 2023 05:55 PM

 

Published : 08 Dec 2023 05:55 PM
Last Updated : 08 Dec 2023 05:55 PM

அரசுப் பணியில் சேர போலிச் சான்றிதழ் அளித்தோர் மீது குற்ற வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: 'போலிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேருவோர் மீது குற்றவியல் வழக்கு பதிய வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். இதனால் தமிழ் வழிக்கல்வி சலுகை அடிப்படையில் குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ் வழிக்கல்விச் சலுகை அடிப்படையில் 34 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் சான்றிதழ்கள் போலியானது என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஎன்பிஎஸ்சிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''போலிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் உள்ளவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்ததற்கு போலி நீதிமன்றம் பாராட்டுக்கள் தெரிவிக்கிறது. போலிச் சான்றிதழ் மூலம் அரசு உயர் பதவிகளுக்கு வருவோர்கள் லஞ்சம் வாங்காமல் வேறு என்ன செய்வார்கள்? இந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்வார்களா? இந்தச் சம்பவங்களால் இரவு, பகலாக அரசுத் தேர்வை நம்பி படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது. போலிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு பதவி வகிப்போர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை விசாரணை அமைப்புகள் தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை டிஎன்பிஎஸ்சி கவனமாக மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தக்கட்ட விசாரணைக்கு இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டியதுள்ளது. இதனால் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x