Published : 08 Dec 2023 08:58 AM
Last Updated : 08 Dec 2023 08:58 AM

வேளச்சேரி | ராட்சத பள்ளத்தில் விழுந்த 2 தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்பு: மற்றொருவர் கதி என்ன? - காத்திருக்கும் குடும்பம்

ஜெயசீலனின் கர்ப்பிணி மனைவி மஞ்சு

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் கன்டெய்னருடன் பொறியாளர் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் என இருவர் புதைந்த நிலையில் நரேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரின் நிலை தெரியாது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்துக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் தங்கி பணி செய்வதற்கு வசதியாக, அருகே கேரவன் போன்ற கன்டெய்னர் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 3-ம் தேதி முதலே சென்னையில் பலத்த புயல் காற்றுடன், கனமழை கொட்டிய நிலையில், 4-ம் தேதி அதிகாலை கட்டுமான நிறுவனம் தோண்டியிருந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மழை நீரால் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், அருகே இருந்த பெட்ரோல் பங்க்கின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, தொழிலாளர்கள் தங்கும் கன்டெய்னர் வாகனம் ஆகியவையும் அந்த பள்ளத்தில் சரிந்து மூழ்கின. இதில், மழை பாதிப்புகளை பார்வையிட வந்த கட்டுமான நிறுவனத்தின் பணிதள பொறியாளரான (‘சைட் இன்ஜினீயர்’) வேளச்சேரி ஜெயசீலன் (29), பெட்ரோல் பங்க்கின் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த நரேஷ் (24) உட்பட அப்பகுதியில் இருந்த 5 ஊழியர்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்தனர்.

ஜெயசீலன், நரேஷ்

அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் ஓடிவந்து, பள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 ஊழியர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஜெயசீலன், நரேஷ் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி 4-வது நாளாக நேற்றும் நடந்தது. என்எல்சி நிறுவனத்திடம் இருந்து ராட்சத பம்ப் வரவழைக்கப்பட்டு, தண்ணீரை விரைந்து வடியவைப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நரேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மற்றொருவரான ஜெயசீலனுக்கு திருமணமாகி 11 மாதம்தான் ஆகிறது. அவரது மனைவி மஞ்சு இரண்டரை மாத கர்ப்பமாக உள்ளார். கணவர் நீருக்குள் மூழ்கிய தகவல் அறிந்து அங்கு வந்த மஞ்சு, கடந்த 4 நாட்களாக அழுதபடி அங்கேயே இருந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘‘கடந்த 4-ம் தேதி கனமழை கொட்டிய நிலையில், அதிகாலை 4 மணி அளவில் அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இப்போது செல்ல வேண்டாம் என்று நான் கூறியும், ‘உடனே சென்று ஜெனரேட்டரை இயக்கி, மழை நீரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் ரூ.2.50 கோடி இழப்பு ஏற்பட்டுவிடும்’ என்று கூறிவிட்டுச் சென்றார். முதலில் மறுத்த அவர், நிறுவனத்தினரின் கட்டாயத்தாலேயே அங்கு சென்றார். நிறுவனத்துக்காக உயிரை பணயம் வைத்து சென்ற அவரை மீட்பதில் சுணக்கம் காட்டுகின்றனர்’’ என்று கண்ணீருடன் கூறினார்.

சென்னை வேளச்சேரியில் மழையின்போது
பள்ளம் ஏற்பட்டு விபத்துக்குள்ளான
இடத்தில் தொடரும் மீட்புப் பணி.

கிண்டி பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர், கட்டுமான நிறுவனம் தோண்டி வைத்த ராட்சத பள்ளத்தில் வேகமாக பாய்ந்தது. இதனால் திடீரென மண் சரிவு ஏற்பட்டதாலேயே கன்டெய்னர், பெட்ரோல் பங்க்கின் முன்பகுதி ஆகியவை உள்ளே விழுந்து நீருக்கடியில் புதைந்தன என்று தீயணைப்பு துறையினர் கூறுகின்றனர். உள்ளே சிக்கிய இருவரையும் மீட்கும் பணியில் சென்னை போலீஸார், தீயணைப்பு படையினர், மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித் துறையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், மீட்பு பணியில் சுணக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ‘‘விபத்து நடந்த இடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், அதிகாரிகளும் நேரில் வந்துஆய்வு செய்தும் மீட்பு பணி துரிதப்படுத்தப்படவில்லை’’ என்று கூறி, மறியலிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் தொடர்பு இருப்பதாக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதை அமைச்சர் தரப்பு மறுத்துள்ளது. ‘‘வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்காக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதிகளுக்கு பார்வையிட சென்றபோது, மக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து விவரம் அறிந்து, பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் அங்கிருக்கும் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.

விபத்து நடந்த பகுதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடமாக இருந்தாலும், தற்போது வரை பொதுப்பணி துறை முதன்மை பொறியாளர் உள்ளிட்டோர், துறையின் இயந்திரங்களை கொண்டு அந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழியாக செல்லும் போதெல்லாம், மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் கேட்டறிந்து வருகிறார். மற்றபடி, அவருக்கு இதில் வேறு எந்த தொடர்பும் இல்லை’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x