Last Updated : 20 Jan, 2018 08:06 PM

 

Published : 20 Jan 2018 08:06 PM
Last Updated : 20 Jan 2018 08:06 PM

புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் விரைவில் உயர்கிறது: ஞாயிறு முதல் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் விரைவில் உயர்கிறது. ஏற்கெனவே தீபாவளி பண்டிகையின்போது பஸ் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்கள் எதிர்ப்பால் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை (ஞாயிறு) முதல் தனியார் பஸ் கட்டணம் புதுச்சேரியில் உயர்கிறது.

புதுச்சேரியில் கடந்த 2012-ம் ஆண்டு என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பஸ் கட்டணத்தை உயர்த்த உரிமையாளர்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஜிஎஸ்டி அமலான பிறகு முதல்வரிடம் இதுபற்றி தொடர்ந்து முறையிட்டனர்.

இதையடுத்து புதுவை அரசின் போக்குவரத்து துறை, டெல்லி பல்நோக்கு போக்குவரத்து குழுமத்தின் புதுச்சேரிக்கான வழிகாட்டு நெறியான விரிவான போக்குவரத்து திட்டத்தில் (சிஎம்பி) குறிப்பிட்டுள்ளபடி கட்டணத்தை மறு நிர்ணயம் செய்தது.

புதிய கட்டணத்துடன் அவ்வபோது மாற்றத்துக்குட்பட்டு அரசு நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி கட்டணமும் அதற்குரிய பேருந்துகளில் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டு, இந்த கட்டண உயர்வு கடந்த தீபாவளியன்று (அக்.18 நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்தது. பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் பேருந்து கட்டணம் உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 3 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அதுவரை பழைய கட்டணமே தொடரும் என்று அறிவித்திருந்தார்.

இதனிடையே தமிழக அரசு பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், புதுவையில் ஓடும் பெரும்பாலான தமிழக அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் இது அமலுக்கு வந்தன.

புதுவையிலிருந்து சென்னை, விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கான பஸ் கட்டணம் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) பஸ்களை தவிர்த்து பெரும்பாலான பஸ்களில் உயர்த்தப்பட்டு விட்டன.

இதையடுத்து போக்குவரத்து துறையானது முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் புதிய கட்டணத்தை விரைவில் அறிவிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டன. தனியார் பஸ் உரிமையாளர்களும் இக்கோரிக்கையை புதுச்சேரி அரசிடம் மீண்டும் முன்வைத்துள்ளனர். அரசும் பரிசீலித்து விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக உறுதியளித்துள்ளது. இதனால் புதுவையிலும் பஸ் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இதுதொடர்பான கோப்பு முதல்வரின் மேசையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கட்டணம் நாளை முதல் புதுச்சேரி தனியார் பஸ்களில் வசூலிக்கப்படும். பிஆர்டிசியிலும் கட்டண உயர்வு அமலாக உள்ளது. அரசு வாய்மொழி உத்தரவை அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x