Published : 21 Jan 2018 10:53 AM
Last Updated : 21 Jan 2018 10:53 AM

சிவகாசி பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ்: நாளைமுதல் உற்பத்தி தொடக்கம்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நாளை (திங்கள்கிழமை) முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் வழக்கம்போல உற்பத்தியைத் தொடங்க உள்ளன.

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கால் சிவகாசியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அனைத்து பட்டாசு ஆலைகளும் முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடங்கின. இதனால் பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.15 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க சிவகாசியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பின் சம்மேளன கூடுதல் தலைவர் ஆசைத்தம்பி, கூடுதல் பொதுச்செயலர் மாரியப்பன் உள்பட 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, சிவகாசியில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பட்டாசு பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கவனத்தை ஈா்க்கும் வகையில் தமிழக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள். முதல்வர் கே.பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து, அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பின் சம்மேளன கூடுதல் தலைவர் ஆசைத்தம்பி பேசுகையில், முதல்வர், அமைச்சர் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டம் இன்றுடன் முடிவடைந்தது. வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் இயங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x