Published : 07 Dec 2023 06:19 PM
Last Updated : 07 Dec 2023 06:19 PM

மணலி முதல் மடிப்பாக்கம் வரை - 4 நாட்களாக வடியாத வெள்ளத்தில் கழிவுநீர் | பால், குடிநீர் விலை உயர்வால் மக்கள் தவிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பு - வட சென்னை நிலை | படங்கள்: ஆர்.ரகு

சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி ஆக்கிவிட்டு ஆந்திராவில் கரையை கடந்தது. சென்னையில் அதிகனமழை ஓய்ந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால் மக்கள் சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சாமான்கள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்களுக்கு பலத்த நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் கூடுதல் நிதிச் சுமை, வருவாய் இழப்பு என இரட்டை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இரண்டு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் நம்மை மூச்சிறைக்க வைத்தது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை, அதிகாரிகள் என யாரும் உதவி செய்யவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றாலும், குடிநீர், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதாக தெரிகிறது. வடசென்னை பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தவில்லை. உணவு, குடிநீர், மின்சாரம், பால் இல்லாமல் நான்கு நாட்களாக மக்கள் பரிதவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்னும் மழை நீர் வடியாததால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் ஏற்கனவே கழிவு நீர் கலந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெட்ரோலியம் தொழிற்சாலைகளை மழைநீர் சூழ்ந்திருக்கும் நிலையில், அங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து வருவதால் எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறி வேறு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்புகளும் வரலாம் எனக் கூறப்படுகிறது.

இடம்: அம்பத்தூர் எஸ்டேட் | படம்: எம்.வேதன்​​​

சென்னை கொரட்டூரில் ஆங்காங்கே சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வெளியேறாமல் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி ஒரு குடிநீர் கேன் 120 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தண்ணீர், பால் போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்க மிகவும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர் வழக்கத்தை விட இருமடங்கு வரை அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இடம்: பட்டாளம் | படம்: ஆர்.ரகு

சென்னை பெரும்பாக்கம் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையில், அங்கிருக்கும் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. தங்களுடைய இரு சக்கர நாற்காலிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகவும், யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இடம்: சூளை | படம்: ஆர்.ரகு

இதனிடையே, சென்னை மடிப்பாக்கத்தில் நான்காவது நாளாக மழை நீர் தேங்கி இருக்கிறது. இதனால் இங்கே நிவாரணப் பணிகளும் சற்று முடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக குபேரன் நகர் பகுதியில் தண்ணீர் இன்னும் மார்பளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. படகுகளை பயன்படுத்திதான் மக்களை மீட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. மேலும் ஜேசிபி மூலம் உணவுகள் வழங்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிப்படைந்த மடிப்பாக்கம் பகுதிதியை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டார். மடிப்பாக்கம் மற்றும் ராம் நகர் பகுதிகளில் மழை வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதால் பழுதானது. மக்கள் அவற்றை அருகில் உள்ள மெக்கானிக் கடைகளுக்கு சரிசெய்ய படையெடுக்கின்றனர். இதனால் கடைகள் முன் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லாரியில் இருந்து ஊற்றப்பட்ட நீரை மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.

மடிப்பாக்கம் ராம்நகரில் குடிநீர் தட்டுப்பாடு | படம்: எம்.முத்துகணேஷ்

மேடவாக்கம் - வேளச்சேரி சாலையில் ஜெருசேலம் கல்லூரி அருகில் 4 நாளாகியும் வெள்ளம் வடியாததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். தொடர் மழையால் தாம்பரம் - மேடவாக்கம் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. தார் சாலை தற்போது வெறும் கல்சாலையாக மட்டுமே காட்சியளிக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இடம்: வட சென்னை - முல்லை நகர் | படம்: பி.ஜோதிராமலிங்கம்

மணலியில் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் மின் இணைப்பு, போதிய உணவு, குடிநீர் வசதி இல்லாமல் குடியிருப்பு வாசிகள் பரிதவித்து வருகின்றனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நிறைய கார்கள் தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் பல லட்சம் மதிப்பிலான இந்த கார்களை மீட்டு தர மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பட்டாளம் பகுதியில் மக்கள் தேங்கியிருக்கும் மழை நீரிலேயே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள ரோடுகள் குன்றும் குழியுமாக மாறியுள்ளது. அதோடு சென்னை பி.எஸ்.சிவசாமி சாலையில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி இருக்கிறது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதி 1 மற்றும் பகுதி 2ல் மின் விநியோகம் சீராக்கப்பட்டு, சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பகுதி 3 மற்றும் ஆவின் பால் பண்ணை சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி முடிந்ததும், மின் விநியோகம் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அங்கே அதிகப்படியான குப்பைகள் கொட்டப்பட்டு இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x